விஜய்க்கு நம்பியவர்களே செய்த துரோகம்? தவெக எம்எல்ஏக்களின் செயலால் தலைவலி.. ஆட்சிக்கு ஆபத்தா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆட்சியமைத்து 6 மாதங்களை கடந்துள்ள நிலையில், சொந்தக் கட்சி எம்எல்ஏக்களின் சர்ச்சைச் செயல்பாடுகளே முதலமைச்சர் விஜய்க்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளன. நம்பிப் பதவி கொடுத்தவர்களே கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாலும், ஆட்சியின் மெஜாரிட்டி பலம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளதாலும் தவெக தலைமை கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பது ஒரு விஷயம் என்றால், அந்த கட்சியை ஒழுங்காக நடத்துவது முற்றிலும் வேறு விஷயம். அரசியலில் வெற்றி, பதவி, அதிகாரம் மட்டுமல்லாமல், துரோகம், பண ஆசை, பதவி ஆசை, காலை வாரிவிடும் செயல்கள் எனப் பல எதார்த்தங்களும் இருக்கின்றன. இதையெல்லாம் விஜய் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொள்ளத் தொடங்கியிருப்பார் போல தெரிகிறது.

Vijay TVK

ஒரு கட்சியை வளர்க்கும்போது பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும், வெவ்வேறு அரசியல் அனுபவம் கொண்டவர்களும் வந்து இணைவார்கள். ஆனால், கட்சியில் இணையும் அனைவரின் நோக்கமும் ஒரே மாதிரியாக இருக்காது. சிலர் தலைமை மீதும் கட்சியின் கொள்கை மீதும் நம்பிக்கை வைத்து உழைப்பார்கள். இன்னும் சிலர் பதவி, பணம், அதிகாரம், செல்வாக்கு போன்ற எதிர்பார்ப்புகளுடன் வரலாம். இந்த வேறுபாடுகளை புரிந்துகொண்டு கட்சியை வழிநடத்துவதுதான் ஒரு தலைவருக்கு இருக்கும் உண்மையான சவால்.

எம்எல்ஏக்கள் சர்ச்சை

கடந்த சில நாட்களாக தவெகவை சேர்ந்த அருள் விக்னேஷ், ரவிசங்கர் ஆகிய 2 எம்எல்ஏக்கள் மீதான புகார்கள் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரங்களில் 2 பேரையுமே விஜய் கண்டித்துவிட்டதாக தகவல் வெளியானாலும், இதுவரை வெளிப்படையான கட்சி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

ஒரு கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்பதற்கு இதுபோன்ற புகார்கள் உதாரணமாக இருக்கின்றன. ஒரு சிலரின் செயல்பாடுகள் ஒட்டுமொத்த கட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்திவிடலாம். அதனால், யார் தவறு செய்தாலும் அவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு தலைமைக்கு இருக்கிறது.

ஆட்சி ஆபத்தா?

கட்சிக்குள் இருக்கும் பிரச்சினைகளை சமாளிப்பதுடன், ஆட்சியை தக்கவைப்பதிலும் விஜய் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. சட்டப்பேரவையில் ஆட்சியைத் தக்கவைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லை. கூட்டணிக் கட்சிகள் மற்றும் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் கட்சிகளின் துணையுடன்தான் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இதனிடையே, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா மற்றொரு புகாரை வீசியிருக்கிறார்.. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அரசுக்கு எதிராக செயல்படுவதற்காகத் தனக்கு ரூ.15 கோடி தர முன்வந்ததாக அவர் சொல்லியிருந்தார்.. இந்த குற்றச்சாட்டு இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஆட்சியின் மெஜாரிட்டி பலம் குறித்த அரசியல் விவாதத்தை இது மேலும் அதிகரித்துள்ளது.

வழக்கு சிக்கல்

தேர்தலுக்கு பிறகு மற்ற கட்சிகளில் இருந்து தவெகவில் இணைந்தவர்களும் இப்போது அரசியல் கவனத்தைப் பெற்றுள்ளனர். குறிப்பாக, அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த 6 முன்னாள் எம்எல்ஏக்களின் தகுதி நீக்க விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த வழக்கில் நவம்பர் 17-ம் தேதி இறுதிக்கட்ட வாதங்கள் நடைபெற உள்ளன. இந்த வழக்கின் முடிவு, சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்களின் அரசியல் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

ஒரு கட்சியில் பல வருடங்களாக இருப்பவர்களையும், தேர்தல் வெற்றிக்குப் பிறகு புதிதாக வந்து இணைந்தவர்களையும் ஒரே கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை..

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அரசியல் பின்னணி, அனுபவம், எதிர்பார்ப்பு இருக்கும். சிலர் கட்சியின் வளர்ச்சிக்காக உழைக்கலாம். இன்னும் சிலர் தங்களுடைய அரசியல் எதிர்காலத்தை மனதில் வைத்து செயல்படலாம். யார் எதற்காகக் கட்சியில் இருக்கிறார்கள் என்பதை அவர்களின் செயல்பாடுகளை வைத்துத்தான் தலைமை புரிந்துகொள்ள முடியும்.

நம்பிக்கை துரோகம்

அரசியலில் எல்லோரும் ஒரே நோக்கத்துடன் செயல்படுவார்கள் என்று சொல்ல முடியாது. பதவி கிடைக்காதபோது அதிருப்தி ஏற்படலாம். எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு உருவாகலாம். சிலர் தங்களுடைய சுயநலத்துக்காக மற்றவர்களை காலை வாரிவிடவும் தயங்க மாட்டார்கள்... அவ்வளவு ஏன், பணத்துக்காக கட்சியின் நலனையே புறக்கணிக்கும் நிலையும் ஏற்படலாம்.

இதுபோன்ற சூழல்களில் யாரை நம்புவது, யாரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது, யாருடைய செயல்பாடுகளைக் கண்காணிப்பது என்பதைத் தலைமை முடிவு செய்ய வேண்டியிருக்கும். பழைய நிர்வாகி என்பதற்காக ஒருவரையும், புதிதாக வந்தவர் என்பதற்காக இன்னொருவரையும் முன்கூட்டியே நம்பிவிடவும் முடியாது... அவரவர் செயல்பாடுகளைப் பார்த்துத்தான் முடிவு செய்ய வேண்டும்.

இந்த வேறுபாடுகளை புரிந்துகொண்டு அனைவரையும் ஒருங்கிணைப்பதுதான் விஜய்க்கு இருக்கும் முக்கியமான கட்சித் தலைமை பொறுப்பு.

எதிர்க்கட்சிகள் நெருக்கடி

இதனிடையே, திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தவெக அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. எம்எல்ஏக்கள் மீதான புகார்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பான கேள்விகள் என ஆளுங்கட்சியை விமர்சிக்க ஏகப்பட்ட விவகாரங்கள் எதிர்க்கட்சிகளுக்கு இப்போது கிடைத்துள்ளன.

எல்லாவற்றிற்கும் மேலாக, தீபாவளி நாளில், நம்முடைய மாநிலத்தில் 11 கொலைகள் நடந்ததாக கூறப்படும் தகவலும், அந்த சம்பவங்களில் போலீஸ் எஸ்ஐ ஒருவர் உயிரிழந்ததும் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி விட்டு போயிருக்கிறது..

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது புதிய அரசின் முக்கியப் பொறுப்புகளில் ஒன்று.. அதனால் இதுபோன்ற சம்பவங்களை அரசு எப்படிக் கையாள்கிறது என்பதை மக்கள் உன்னிப்பாகவே கவனிக்கிறார்கள்.

நடவடிக்கை தேவை

இப்படி பல்வேறு விமர்சனங்கள், சர்ச்சைகள், புகார்கள் நிலவினாலும், தவெக தரப்பில் இதற்கு வேறொரு பார்வையும் முன்வைக்கப்படுகிறது. கட்சியில் இருக்கும் ஒருசிலர் மீதான புகார்களை வைத்து ஒட்டுமொத்த கட்சியையும் தவறாக மதிப்பிடக் கூடாது என்பதே தவெகவினரின் வாதம்.

புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள கட்சியின் ஒவ்வொரு செயல்பாட்டையும் எதிர்க்கட்சிகள் உன்னிப்பாகக் கவனிப்பதும், சின்ன சின்ன பிரச்சினைகளைக்கூட அரசியல் விமர்சனமாக மாற்றுவதும் இயல்புதான் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். அதேநேரத்தில், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் விஜய் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையையும் தவெக ஆதரவாளர்கள் வெளிப்படுத்தவே செய்கிறார்கள்.

ஆனால், ஆதரவாளர்களின் இந்த நம்பிக்கை மட்டுமே போதாது.. புகார்கள் எழும்போது அவற்றை முறையாக விசாரித்து, தவறு நடந்தது உறுதியானால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் கட்சிக்குள் ஒழுங்கு இருப்பதாக மக்களுக்கும் தொண்டர்களுக்கும் நம்பிக்கை ஏற்படும்.

அரசியல் சோதனை

ஏனென்றால், ரசிகர் மன்றத்தை வழிநடத்துவதற்கும், பல்வேறு அரசியல் பின்னணிகளைக் கொண்டவர்களுடன் ஒரு கட்சியை நடத்துவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும், அரசியல் கட்சியில் இருப்பவர்களின் எதிர்பார்ப்புகளும் ஒன்று கிடையாது. இங்கு கொள்கை, பதவி, அதிகாரம், பணம் எனப் பல விஷயங்கள் ஒருவருடைய செயல்பாட்டை தீர்மானிக்கலாம்.

தேர்தல் வெற்றிக்கு பிறகு கிடைத்த முதலமைச்சர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வது மட்டும் ஒரு தலைவரின் வெற்றி கிடையாது. கட்சிக்குள் ஒழுங்கை நிலைநாட்டுவதும், சுயநலத்துக்காக செயல்படுபவர்களை கண்டறிவதும், உண்மையாக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பதும் முக்கியம்.

அந்தவகையில், கட்சிக்குள் எழும் சவால்களை விஜய் எப்படிக் கையாள்கிறார் என்பதில்தான் அவரது அரசியல் தலைமைக்கான உண்மையான சோதனை இருக்கிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+