கடன் எப்படி அதிகமாச்சு? விஜய் பதில் சொல்லியே ஆகனும்! பஞ்சாயத்துக்கு வந்த பாஜக.. லிஸ்ட் போட்ட நயினார்
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதல் பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து நிலையில், பல்வேறு துறைகளுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில் பட்ஜெட்டை குறைப்பது தரத்தில் சமரசம் செய்வதற்கு சமம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று முதல்வராக விஜய் பொறுப்பேற்று இருக்கிறார். இந்த நிலையில் 2026 2027-ஆம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன் தனது முதல் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருக்கும் நிலையில், திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன.
தமிழ்நாடு பட்ஜெட்
ஏற்கனவே இருக்கும் திட்டங்களை பெயர் மாற்றி விஜய் அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பது, பள்ளிக்கல்வித்துறை, கைத்தறி துணிநூல் உள்ளிட்ட துறை நிர்வாக துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி குறைக்கப்பட்டு இருப்பதாக அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன.
நயினார் நாகேந்திரன்
இந்நிலையில், பட்ஜெட்டை குறைப்பது, தரத்தில் சமரசம் செய்வதற்கு சமம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," திரு. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ள 2026- 2027 ஆண்டிற்கான பட்ஜெட்டில், தமிழகத்தின் மிக முக்கிய துறைகளுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, அரசு இயந்திரத்தினை மழுங்கடிக்கச் செய்யும் முடிவாகும்.
நிதி ஒதுக்கீடு
கடந்த ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில், ரூ. 48,534 கோடியாக இருந்த பள்ளிக்கல்வி துறைக்கான நிதி, இந்த ஆண்டு ரூ. 44,527 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறைக்கான நிதி ரூ. 8,505 கோடியில் இருந்து ரூ. 8,393 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர்வளத்துறைக்கான நிதி ரூ. 10,076 கோடியில் இருந்து ரூ. 9,264 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. எரிசக்தி துறைக்கான நிதி ரூ. 18,091 கோடியில் இருந்து ரூ. 15,828 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கடன் உயர்வு
கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறைக்கான நிதி ரூ. 1,943 கோடியில் இருந்து ரூ. 1,678 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இப்படி முக்கியமான துறைகளுக்கெல்லாம் நிதி ஒதுக்கீட்டை குறைத்த தவெக அரசு, தமிழகத்தின் கடன் மட்டும் ரூ.1.22 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.73 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக கணக்கு காட்டுவது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது. எனவே, அரசின் முக்கியத் துறைகளுக்கான நிதிகளைக் குறைத்தது ஏன்?
முதல்வர் விஜய்
இதனால் உண்டாகும் பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு என்ன மாதிரியான செயல்திட்டங்களை வைத்துள்ளது? செலவினங்கள் குறைவாக இருக்கும் பட்சத்தில், கடன் தேவை மட்டும் அதிகரிக்க காரணம் என்ன? "Finance Leakages"- ஐ சரி செய்கிறோம் என்ற பேர்வழியில், "People Welfare"-இல் அரசு சமரசம் செய்கிறதா? உள்ளிட்ட மக்களின் சந்தேகங்களுக்கு முதல்வர் திரு. விஜய் அவர்களும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களும் உடனடியாக மக்கள் மன்றத்தில் பதிலளிக்க வேண்டும்!" என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
