என்னது நீங்க இளைய காமராஜரா? இதுல எடிட்டிங் வேற! விஜய்க்கு எதிராக கொந்தளிக்கும் நாடார் அமைப்புகள்!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மாணவர்களை சந்தித்த போது சிலர் இளைய காமராஜர் என கூறினர். இந்த நிலையில் காமராஜரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக நாடார் அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. மேலும் விஜயை கண்டித்து வரும் 11ஆம் தேதி சென்னை சாலிகிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் நாடார் அமைப்புகள் மற்றும் நாடார் சங்கங்கள் கூறியுள்ளன.
நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் படி அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்ந்தெடுத்து நேரில் சந்தித்து பரிசு வழங்கி வருகிறார்.
கடந்த ஆண்டும் மாணவர்கள் சந்திப்பு கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த எட்டாம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், 19ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியானது.

இதனை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தங்கள் சட்டமன்ற தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் படி, முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின் பட்டியலை தயார் செய்து தலைமைக்கு அனுப்பினர். கடந்த 30ஆம் தேதி அரியலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவிகளை சந்தித்து விஜய் விருந்து வைத்து அவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து இன்று இரண்டாவது கட்டமாக மாமல்லபுரம் 4.5 விடுதியில் ராமநாதபுரம், ஈரோடு, கரூர், தஞ்சாவூர், தர்மபுரி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவாரூர், மயிலாடுதுறை, விருதுநகர், மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகளை சந்தித்து பரிசு வழங்கினார். அப்போது பேசிய ஒரு மாணவனின் தந்தை இன்று முதல் நீங்கள் இளைய தளபதி என்று அழைக்கப்படுவது போல இளைய காமராஜர் என அழைக்கப்படுவீர்கள் என கூறினார்.
அதை பார்த்து விஜய் சற்றே மிரண்டு போய் அவரின் தோளை பிடித்து அழுத்தினார். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் விஜய் திட்டமிட்டு தன்னை இளைய காமராஜர் என அழைக்க வைக்கிறார் என நாடார் அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. இந்த நிலையில் நடிகர் விஜய்யை கண்டித்து காமராஜர் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருக்கின்றனர்.
பெருந்தலைவரின் புகழுக்கு தொடர்ந்து களங்கம் ஏற்படுத்தும் வண்ணம் விஜய் செயல்படுவதாகவும் காமராஜரின் புகழை களங்கப்படுத்தும் நபர்களை கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 11ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை சாலிகிராமத்தில் உள்ள காமராஜர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நாடார் அமைப்புகள் மற்றும் நாடார் சங்கங்கள் கூறியுள்ளனர். விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து இதுவரை பல்வேறு பிரச்சினைகள் வந்திருக்கும் நிலையில் முதன்முறையாக சாதி அமைப்புகள் விஜய்க்கு எதிராக களமிறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications