இடைத்தேர்தல் பொதுக்கூட்டம்.. கூட்டணி கட்சியினருடன் மேடை ஏற மறுக்கும் விஜய்.. அப்செட்டில் திருமா!
சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பொதுக்கூட்ட மேடையை முதல்வர் விஜய்யுடன் பகிர்ந்து கொள்ள கூட்டணி கட்சித் தலைவர்கள் கேட்டிருக்கின்றனர். அதற்கு தவெக தரப்பில், நேரடியாக விஜய்யுடன் மேடையை பகிர்ந்து கொள்ள வாய்ப்பே இல்லை என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டணி கட்சியினர் கடுமையான அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் தவெக சார்பாக மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு தவெகவில் சீட் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அவர்களுக்கு மக்களிடையே எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

அதேபோல் இடைத்தேர்தலுக்கு தயாராகும் வகையில் தவெக தலைமையில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்ற புதிய கூட்டணி உருவாக்கப்பட்டது. காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் இந்த கூட்டணியில் இருக்கின்றன. தவெக முதல்முறையாக கூட்டணியாக தேர்தலை சந்தித்துள்ள போதும், இப்படியொரு எதிர்ப்பு எழுந்திருப்பது விவாதமாகி உள்ளது.
இதனால் முதல்வர் விஜய் கட்டாயம் பிரச்சாரத்திற்கு வர வேண்டும் என்று வேட்பாளர்கள் அமைச்சர்கள் மூலமாக கேட்டு கொண்டுள்ளனர். அதற்கேற்ப விஜய்யும் மதுராந்தகம் தொகுதியில் பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோ என்று 2 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதனிடையே கூட்டணி கட்சிகள் சார்பாக ஒரு கோரிக்கை தவெக தலைமைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
அதாவது இடைத்தேர்தல் பொதுக்கூட்ட மேடையை முதல்வர் விஜய்யுடன் கூட்டணி கட்சித் தலைவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பி கோரிக்கை வைத்திருக்கின்றனர். ஆனால் தவெக தலைமையோ நேரடியாக விஜய்யுடன் மேடையை பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை என்று பதில் அளித்திருக்கிறது. இதனால் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
மதுராந்தகம் தொகுதியில் விசிகவுக்கு கணிசமான வாக்குகள் இருந்தாலும், திருமாவளவனுடன் மேடையேற கூட விஜய் விரும்பவில்லை. வழக்கம் போல் வேட்பாளர் பெயரை கூட சொல்லாமல், விசிலுக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்பதையே விஜய் பேச உள்ளதாகவும் பேச்சுகள் அதிகரித்துள்ளன. இதனால் தவெக கூட்டணி என்பது பெயரளவிற்கு தான் போல என்று கூட்டணி கட்சித் தலைவர்கள் புலம்ப தொடங்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications
