9 மாதமாக நடந்த ஜனநாயகன் ஷூட்டிங்.. ஒரு வழியாக முடித்துக் கொடுத்த விஜய்.. இனி முழு நேர அரசியல்தான்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பை முடித்து கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் விஜய் இனி முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று சொல்லப்படுகிறது. கல்வி விருது விழா முடிவடைந்த பின், விஜய் பிறந்தநாளையொட்டி அடுத்தக்கட்ட பணிகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார் நடிகர் விஜய். அப்போது வெளியான அறிக்கையில், தற்போது நடித்து கொண்டிருக்கும் ஒரு படம்.. ஏற்கனவே ஒப்புக் கொண்ட ஒரு படம் ஆகியவற்றை முடித்து கொடுத்த பின் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார். அதற்கேற்ப விஜய்-ன் கடைசி படமாக ஜனநாயகன் அறிவிக்கப்பட்டது.

மாதத்திற்கு 2 நாட்கள்
அ.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபு டியோல், மமிதா பைஜு, பிரியா மணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலே நடைபெற்று வருகிறது. இதற்கிடையே விஜய் மாதம் ஒரு அரசியல் நிகழ்ச்சி என்று 2 நாட்கள் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
தவெக தொண்டர்கள் அதிருப்தி
மீதமுள்ள நாட்களில் அறிக்கை, எக்ஸ் கருத்து என்று மட்டுமே பதிவிட்டு வந்தார். இதனால் தவெக தொண்டர்களே பதற்றம் ஆகினார்கள். எப்போது விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று பேச தொடங்கினார்கள். கடந்த வாரம் நடந்த கல்வி விழாவில் கூட விஜய், ஜனநாயகன் படத்தில் அதே லுக்கில் இருந்தார். இதனால் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் இது கூடுதல் விவாதமாகியது.
ஜனநாயகன் ஷூட்டிங் நிறைவு
இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே விஜய் தொடர்புடைய காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தாலும், பாடல் காட்சிகள் மற்றும் பேட்ச் வொர்க் ஆகியவற்றையும் தற்போது விஜய் முடித்து கொடுத்துள்ளார். இதனால் விஜய் இனி வரும் நாட்களில் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
அடுத்த திட்டம்
இதற்கான அறிவிப்பை தவெக தலைவர் விஜய், கல்வி விருது வழங்கும் விழாவிலேயே அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. விஜய்-ன் பிறந்தநாள் விழா இன்னும் 2 வாரங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதுமான சுற்றுப்பயணம் மற்றும் அடுத்தக் கட்ட கட்சிப் பணிகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications