சினிமாவை விடுங்க.. அரசியலிலும் ரஜினியை காப்பி அடிக்கும் விஜய்? கட்சி நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங்
சென்னை: சினிமாவில் ரஜினிகாந்தை காப்பியடித்தே, அவரது ஸ்டைலை பின்பற்றியே விஜய் படம் நடித்து வந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது அரசியலிலும் ரஜினிகாந்தை பின்பற்ற தொடங்கியிருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். ரஜினிகாந்த் எப்படி அரசியலுக்கு வருவதற்கு முன்பு ரசிகர்களுடன் போட்டோ ஷூட் நடத்தினாரோ அதே பாணியில் தற்போது விஜய்யும் சுமார் 2000 பேருடன் போட்டோ ஷூட் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் களம் காண்கிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு விக்கிரவாண்டியில் நடைபெற்ற தனது கட்சியின் முதல் மாநாட்டில் பேசிய விஜய், தங்களுடன் கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்று அறிவித்தார்.

தனித்து போட்டியிடும் தவெக
கூட்டணிக்கு கதவை திறந்து காத்திருந்த விஜய்க்கு ஏமாற்றமே மிஞ்சியது. எந்த கட்சியும் விஜய்யுடன் கூட்டணி சேர தயாராக இல்லாததால், விஜய் தனித்து விடப்பட்டார். 234 தொகுதிகளிலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தனித்தே களம் காண உள்ளது. தேர்த்லுக்கு இன்னும் சரியாக ஒரு மாதமே உள்ள நிலையில் வேட்பாளர் தேர்வில் விஜய் தீவிரமாக உள்ளார்.
நிர்வாகிகளுடன் தனித்தனியே புகைப்படம்
இரண்டு கட்டங்களாக விஜய் வேட்பாளர் தேர்வு நடத்தியுள்ள நிலையில் நாளை வேட்பாளர்களை விஜய் சென்னைக்கு அழைத்து உள்ளதாக சொல்லப்படுகிறது. 120 -க்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு நாளை வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுவில் தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்து விஜய் பயிற்சி அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது ஒருபக்கம் இருக்க, தனது கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் வகையில் கட்சியின் பல்வேறு மட்டத்தில் உள்ள நிர்வாகிகளை நேரில் அழைத்து விஜய் போட்டோ ஷூட் நடத்த உள்ளாராம். கட்சி வேலைகளை சுறுசுறுப்பாகவும் உற்சாகமாக செய்ய வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் விதமாக விஜய் கட்சி நிர்வாகிகளுடன் தனித்தனியே புகைப்படம் எடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
ரஜினியை பின்பற்றும் விஜய்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவித்தார். இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக தனது ரசிகர்களை நேரில் அழைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதே பாணியை பின்பற்றி விஜய் தற்போது போட்டோஷூட் நடத்த இருப்பதாக அரசியல் வட்டாரத்திலும் பலரும் பேசத்தொடங்கியுள்ளனர். அதேபோல, விஜய் போட்டோ ஷூட் நடத்த இருப்பதாக வெளியாகியிருக்கும் விவகாரத்தை வைத்து சமூக வலைத்தளங்களிலும் விவாதங்கள் அதிகரித்துள்ளன.
சினிமாக்களில் ரஜினியை காப்பியடித்து ஹிட் படங்களை கொடுத்த விஜய், அரசியலிலும் அவரது பாணியை காப்பியடிக்க தொடங்கியிருக்கிறார் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். தவெக தலைவர் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக தவெக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இதுபோக தவெகவின் முக்கிய நிர்வாகிகளான புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் சென்னைக்குள்ளேயே போட்டியிட தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.
விஜய் எப்போது பிரச்சாரம்?
தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளால் விஜய்யின் மக்கள் சந்திப்பு முடக்கப்படுவதாக தவெகவினர் குற்றம் சாட்டினர். தற்போது தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்து இருப்பதால், விஜய் சூறாவளி பிரசாரத்தை தொடங்குவார் என தவெக நிர்வாகிகள் கூறி வந்தனர். ஆனால் தற்போது வரை விஜய் பிரசரத்தை தொடங்க வில்லை.. இந்த நிலையில்தான் பெரம்பூரில் இருந்து விஜய் தனது பிரசாரத்தை தொடங்க உள்ளதாகவும் வரும் மார்ச் 24 அல்லது 25 ஆம் தேதியில் விஜய் பிரசாரம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications