குதிரை பேர குற்றச்சாட்டு.. கண்காணிக்க தொடங்கிய டெல்லி.. உஷார் நிலையில் முதல்வர் விஜய்!
சென்னை: சில நாட்களுக்கு முன் ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து தவெக மீது குதிரை பேர புகாரை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்திருந்தார். இதன் பின்னணியில் டெல்லியின் ஆட்டம் இருப்பதாக பேச்சுகள் எழுந்துள்ளன. எந்தப் பிரச்சனையில் தவெக சிக்குகிறது என்பதை டெல்லி கண்காணிக்க தொடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த நாள் முதலே முதல்வர் விஜய், தவெக அமைச்சர்கள் யாரும் பாஜகவை விமர்சிப்பதில்லை. மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கையாள்வோம் என்று தொடர்ச்சியாக பேசிக் கொண்டே இருக்கின்றனர். அதற்கேற்ப மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்த போது, அவரை நேரில் சென்று வரவேற்றதோடு, அவருக்கு வீட்டில் செய்த மசாலாப் பொடியை பரிசாக விஜய் வழங்கினார்.

சட்டசபையில் அமைச்சர் வன்னி அரசு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரை விமர்சித்த போது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எழுந்து அந்த வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு கோரினார். பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் பெயரை வன்னி அரசு சொன்ன போது, பாஜக எம்எல்ஏ கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் ஆதவ் அர்ஜுனா எதிர்ப்பு தெரிவித்தார்.
எந்தக் காரணத்தை கொண்டு மத்திய அரசை பகைத்துக் கொள்ள கூடாது என்பதில் தவெக தெளிவாக இருக்கிறது. அதேபோல் பாஜகவும் தவெக உடன் நட்புடன் இருப்பதாக காட்டி கொண்டாலும், கொஞ்சம் கொஞ்சமாக பிடியை இறுக்கி இருக்கி வருகிறது. அதிமுக எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவதை டெல்லி தூசு தட்ட தொடங்கி இருப்பதாக தெரிகிறது.
அதுமட்டுமல்லாமல் தவெக மீதான குதிரை பேர குற்றச்சாட்டுகளையும் கையில் எடுக்க ஆயத்தமாகி இருக்கிறது. ஏனென்றால் திடீரென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆளுநர் அர்லேகரை சந்தித்து தவெக மீது குதிரை பேர புகாரை கொடுத்திருக்கிறார். அந்த புகாரில் அமமுக எம்எல்ஏ காமராஜிடம் பேசப்பட்ட விஷயங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மறுபக்கம் மத்திய உளவுத்துறையும் அந்த விவகாரம் தொடர்புடைய செல்ஃபோன் உரையாடல்களை திரட்டி வருவதாக பேச்சுகள் எழுந்துள்ளன. ஒருவேளை டிடிவி தினகரனின் புகார், சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டால், டெல்லியின் பிடி இறுகும். இதனை கணித்தே தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க தவெக ஆர்வம் காட்டவில்லை என்ற பின்பத்தை உருவாக்க தொடங்கி இருக்கிறது.
பிரதமர் வேட்பாளர் விஜய் என்ற தவெகவினர் தொடர் கோஷத்தை டெல்லி ரசிக்கிறது. அதனை புரிந்து கொண்ட தமிழக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ச்சியாக கொந்தளித்து வருகின்றனர். ஆனாலும் காங்கிரஸ் கட்சியினர் கொந்தளிப்பை தவெகவினர் கண்டுகொள்ளவில்லை. இதனால் லோக்சபா தேர்தலின் போது என்ன கணக்கில் விஜய் இருப்பார் என்பதையும் காங்கிரஸ் கட்சியினரால் கணிக்க முடியவில்லை என்று தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications
