விஜய் அலை.. திமுகவிடம் 55 லட்சம், அதிமுகவிடம் 49 லட்சம்.. நோட்டா வாக்குகளிலும் கைவைத்த தவெக!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த இரு திராவிட கட்சிகளின் வாக்கு வங்கியும் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. முதல்முறையாக தேர்தல் களம் கண்ட தவெக 108 தொகுதிகளிலும், திமுக 73 தொகுதிகளிலும், அதிமுக 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சென்னை, கோவை, மதுரை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் தவெக அதிரி புதிரி வெற்றியை பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் தவெக 34.92% வாக்குகளை பெற்று ஆச்சரியம் கொடுத்துள்ளது. சுமார் 35% வாக்குகள் எந்தெந்த கட்சிகளிடம் இருந்து தவெக கைப்பற்றியது என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது. இதனை 2021 சட்டசபைத் தேர்தலை ஒப்பிட்டால் எளிதாக புரிய வரும். அப்படி ஒப்பிட்டு பார்க்கையில், திமுகவிடம் இருந்துதான் தவெக அதிக வாக்குகளை பெற்றுள்ளது.
2021-ல் 1.74 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்த திமுக, இந்த முறை 1.19 கோடி வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இது முந்தைய தேர்தலை விட சுமார் 55 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் சரிவாகும். திமுகவை போல் அதிமுகவும் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. 2021-ல் 1.53 கோடியாக இருந்த அக்கட்சியின் வாக்குகள், தற்போது 1.04 கோடியாக குறைந்துள்ளது. இது சுமார் 49 லட்சத்திற்கும் அதிக வாக்குகள் சரிவாகும்.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 2021ல் பெற்ற 30.42 லட்சம் வாக்குகளில் இருந்து சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை இழந்து 19.72 லட்சமாகச் சுருங்கியுள்ளது. காங்கிரஸ் சுமார் 3.15 லட்சம் வாக்குகளையும், சிபிஐ 1.76 லட்சம் வாக்குகளையும், சிபிஎம் 97 ஆயிரம் வாக்குகளை பறிகொடுத்துள்ளன. கடந்த தேர்தலில் 3.45 லட்சமாக இருந்த நோட்டா வாக்குகள், இந்த முறை 1.99 லட்சமாகக் குறைந்துள்ளன.
விசிக கடந்த தேர்தலில் 4.57 லட்சம் வாக்குகளை பெற்ற நிலையில், இம்முறை 5.40 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. ஆனால் கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக, இம்முறை 8 தொகுதிகளில் போட்டியிட்டது. இதனால் 82 ஆயிரம் வாக்குகள் அதிகரித்துள்ளது. 2021-ல் பதிவான 4.62 கோடி வாக்குகளுடன் ஒப்பிடும்போது, இந்த 2026 தேர்தலில் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 4.88 கோடியாக உயர்ந்துள்ளது. புதிய வாக்காளர்களின் வருகை மற்றும் வாக்கு மாற்றங்கள் தமிழக அரசியலில் ஒரு புதிய திசையை நோக்கிய நகர்வை வெளிப்படுத்துகின்றன.












Click it and Unblock the Notifications