பெரம்பூர் தொகுதியில் விஜய் களமிறங்கினால்.. சேகர்பாபுவை களமிறக்க திமுக திட்டம்? ஆலோசனையில் அறிவாலயம்!
சென்னை: தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டால் அமைச்சர் சேகர்பாபுவை களமிறக்க அறிவாலயம் ஆலோசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஒருவேளை திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடும் பட்சத்தில் இனிகோ இருதயராஜ்க்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
சட்டசபைத் தேர்தல் பணிகளை தவெக தலைவர் விஜய் முடுக்கிவிட்டுள்ளார். ஏற்கனவே தவெக வேட்பாளர்களுக்கான நேர்காணலை விஜய் நடத்தி வரும் சூழலில், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை தயாராக வைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. செங்கோட்டையன் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியிலும், ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியிலும், சிடிஆர் நிர்மல் குமார் உசிலம்பட்டி தொகுதியிலும் போட்டியிட தயாராகின்றனர்.

அதேபோல் அருண்ராஜ் திருச்செங்கோடு தொகுதியிலும், மரியா வில்சன் ஆர்கே நகர் தொகுதியிலும் போட்டியிட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் தவெக தலைவர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏற்கனவே விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா தலைமையில் நிர்வாகிகள் தீர்மானம் போட்டனர்.
அதேபோல் பெரம்பூர் தொகுதிக்கு அடிக்கடி வருவேன் என்று விஜய் கூறியதாக வேட்பாளர்கள் நேர்காணலில் பங்கேற்றவர்கள் சிலர் கூறி இருக்கின்றனர். ஆனால் விஜய்யின் மற்றொரு வாய்ப்பாக திருச்சி கிழக்கு தொகுதி இருப்பதாக சிலர் கூறுகின்றனர். இந்த இரு தொகுதியிலும் கிறிஸ்தவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். சுமார் 30 சதவிகிதம் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இருக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் விஜய் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அங்கு திமுக நேரடியாக களமிறங்க முடிவு செய்துள்ளது. இது விஜய்யை மற்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்யவிடாமல் தடுக்கும் முயற்சி தான். ஏனென்றால் விஜய்க்கு எதிராக பலமான வேட்பாளர் நிறுத்தப்பட்டால், அங்கு விஜய் கூடுதலாக பணியாற்ற வேண்டிய தேவை ஏற்படும்.
வாஜ்பாய்க்கு எதிராக மாதவராவ் சிந்தியாவை நிறுத்திய அதே ஐடியா தான். இதனால் பெரம்பூர் தொகுதியில் விஜய் களமிறங்கினால், அங்கு அமைச்சர் சேகர்பாபுவை நிறுத்த திமுக தலைமை ஆலோசித்து வருகிறது. தற்போது துறைமுகம் தொகுதியில் இருந்து வில்லிவாக்கம் தொகுதிக்கு மாற சேகர்பாபு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவருடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தெரிகிறது.
ஒருவேளை திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிட்டால், திமுக தலைமையின் முதன்மை பட்டியலில் சிட்டிங் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் இருக்கிறார். ஆனால் அவருக்கும் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சில மனக்கசப்புகள் உள்ளது. இதனால் கே.என்.நேரு தரப்பில் வேறு சில வேட்பாளர்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் விஜய்க்கு எதிரான திட்டத்தை திமுக தலைமை தீவிரப்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications