பரந்தூருக்கு பல்ப்.. செய்யூர் - கும்மிடிப்பூண்டியை கைகாட்டும் சிஎம் விஜய்! அங்கே விவசாய நிலமில்லையா?
சென்னை: சென்னை அருகே பரந்தூரில் புதிய விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக வெற்றிக் கழக அரசின் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதனால் தமிழகம் பொருளாதாரத்தில் பின் தங்கும் என்ற விமர்சனம் எழுந்திருக்கும் நிலையில், சென்னையின் 2வது விமான நிலையம் என்னவானது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் 2வது விமான நிலையத்திற்காக செய்யூர், கும்மிடிப்பூண்டி ஆகிய 2 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்து விமான நிலைய ஆணையத்திடம் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்த கோரி உள்ளது.
பரந்தூரைப் போலவே செய்யூர் - கும்மிடிப்பூண்டி பகுதிகளிலும் 65 சதவீதத்திற்கு மேல் விவசாய நிலங்களும், 100க்கும் மேற்பட்ட நீர் நிலைகளும் உள்ளன. இதனால் பரந்தூருக்கு ஒரு நீதி, செய்யூர், கும்மிடிப்பூண்டிக்கு ஒரு நீதியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகள் எண்ணிக்கை காரணமாக புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்தும் பணிகளை துவக்கியது. ஆனால் தங்கள் பகுதியில் விமான நிலையம் வரக்கூடாது என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக போராடினர்.
இதற்கிடையே நடிகராக இருந்து அரசியல்வாதியாக அவதாரம் எடுத்த விஜய் முதன்முறையாக பரந்தூர் மக்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது பருந்தூர் விமான நிலைய திட்டம் தவெக ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்யப்படும் என கூறினார் . தொடர்ந்து விஜய் அரசு அமைந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டசபையில் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதற்கு பரந்தூர் மக்கள் வரவேற்பு தெரிவித்தாலும், தமிழகத்தின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு இந்த திட்டம் தொடர்ந்து இருக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன.
அதுமட்டுமல்லாமல் பறந்தூர் விமான நிலைய திட்டம் வந்திருந்தால் என்னென்ன நன்மைகள் நடந்திருக்கும்? வராததால் எவ்வளவு பிரச்சனைகள் வரும்? என்பது குறித்து ஒரு பெரிய விவாதமே நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் விவசாய நிலங்களை அழித்துவிட்டு விமான நிலையம் வேண்டாம் என்பது தான் எங்கள் கொள்கை என விஜய் தரப்பினர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் பரபரப்பை அதிகரிக்கும் வகையில் ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதிகளில் சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு நடத்த தமிழக அரசு விமான நிலைய ஆணையத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது. தற்போது அதில் தான் மிகப்பெரிய விவாதமே வெடித்திருக்கிறது.
பரந்தூரில் விவசாய நிலங்கள் இருக்கிறது என்பதற்காகத்தான் அந்தத் திட்டத்தை ரத்து செய்வதாக விஜய் அரசு கூறியது. அதே நேரத்தில் விமான நிலையம் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். தற்போது செய்யூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்த கோரி இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. தரவுகளுடன் பார்க்கும்போது பரிந்துரை விட செய்யூர் - கும்மிடிப்பூண்டி பகுதிகளில் விவசாய நிலம் அதிகம் இருக்கிறது.
கிட்டத்தட்ட 65 சதவீத நிலங்கள் முழுமையான விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பயிர் நிலங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான இலத்தூர், சூனம்பேடு, ஒடுக்கத்தூர் ஆகிய பகுதிகள் அந்த மாவட்டத்தில் மிக வளமான கடலோர விவசாயம் மண்டலங்களாக இருக்கின்றன. அரசு தரவுகளின் படி செய்யூர் வட்டார பகுதிகளில் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் சுமார் 65 சதவீதத்திற்கும் மேல் விவசாய நிலங்களாக இருக்கிறது.
அது மட்டும் அல்லாமல் செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல், நிலக்கடலை, உளுந்து மற்றும் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், செய்யூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான சிறிய மற்றும் பெரிய ஏரிகள் கிணறுகள் குளங்கள் இருக்கின்றன. சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் செய்யூர் பெரிய ஏரி இருக்கிறது/ இதன் மூலமாக மட்டும் சுமார் 300 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் நேரடியாக பாசனம் பெறுகின்றன
ஓதியூர் ஏரி செய்யூரின் தென்கிழக்கு பகுதியில் மிகப்பெரிய நீர் நிலையாக உள்ளது. இது அப்பகுதியை சுற்றியுள்ள பல கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது. செய்யூர் வட்டத்தின் கீழ் 117 வருவாய் கிராமங்களையும் சேர்த்து பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் பராமரிப்பின் கீழ் மொத்தம் 150 முதல் 200-க்கும் மேற்பட்ட பாசன ஏரிகள் குளங்கள் உள்ளன. இவை தவிர ஆயிரக்கணக்கான விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளும் பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் பெரும்பாலுமான கிராம பகுதிகளில் நஞ்சை மற்றும் புஞ்சை விவசாய நிலங்கள் உள்ளன. அரசு மற்றும் சென்சஸ் தரவுகளின் படி கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் உள்ள சுமார் 80 வருவாய் கிராமங்களின் ஒட்டுமொத்த பரப்பு 38,913 ஹெக்டேர் ஆகும். ஏக்கர் கணக்கில் இது 96 ஆயிரம். இந்த ஒட்டுமொத்த பரப்பில் காடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் போக சுமார் 45 சதவீத முதல் 50 சதவீதம் நிலப்பரப்பு விவசாயம் செய்யக்கூடிய நஞ்சை மற்றும் புஞ்சை விவசாய நிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பகுதியில் ஆரணி ஆற்றின் பாசனத்தை பெற்று மா, கரும்பு, உளுந்து, நிலக்கடலை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. நீர்நிலைகள் குறித்த புள்ளி விவரங்களின்படி கும்மிடிப்பூண்டி வட்டாரம் சென்னை வடிநிலத்தின் வடக்கு பகுதியில் ஆரணி ஆறு பழவேற்காடு ஏரியின் நீர்வரத்து பாதைகளுக்கு அருகேஅமைந்துள்ளது. கும்மிடிப்பூண்டியின் நீர் பாசன உள் வடிநில பகுதியில் பொதுப்பணித் துறையின் நேரடி பராமரிப்பில் 26 முக்கிய பாசன ஏரிகள் உள்ளன.
இந்த ஏரிகள் மூலம் மட்டுமே சுமார் 4500 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகின்றன. மேலும் இந்த வட்டத்தில் 80க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஊராட்சி ஒன்றிய குளங்கள், குட்டைகள், ஏரிகளை சேர்த்தால் 150-க்கும் மேற்பட்ட பெரிய சிறிய நீர் நிலைகள் உள்ளன. குறிப்பாக இந்தப் பகுதியில் தான் தாமரை ஏரி உள்ளது குறிப்பிடத்தக்கது. சத்தியமேடு மலைப்பகுதியில் இருந்து உருவாகும் சிறிய ஓடைகளும். ஆரணி ஆற்றின் உபநீரும் இப்பகுதியில் ஏரிகளை நிரப்பும் முக்கிய ஆதாரங்களாக உள்ளன.
இப்படி சென்னையின் மழைக்கால வெள்ளத்தை தாங்கி நிற்கும் வடிநில பகுதிகளாக இருக்கும் இந்த பகுதிகளில் விமான நிலையம் அமைவது எவ்வாறு சாத்தியம் என்ற கேள்வி எழுந்துள்ளது. விவசாய நிலங்கள் அழிக்கப்படுகின்றன.. நீர் நிலைகள் பாதிக்கப்படுகின்றன என குரல் கொடுத்த தமிழக வெற்றிக் கழக அரசு செய்யூர் - கும்மிடிப்பூண்டி பகுதியை கைகாட்டியது ஏன்? என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் செய்யூர் பகுதியில் விவசாய பயன்பாட்டில் உள்ள நிலத்தின் அளவு எவ்வளவு? விமான நிலையத்திற்காக அடையாளம் காணப்பட்ட நிலத்தில் எத்தனை ஏக்கர் நஞ்சை? எத்தனை ஏக்கர் புஞ்சை? எவ்வளவு அரசு? எவ்வளவு தனியார் நிலம்? எத்தனை விவசாய குடும்பங்கள் உள்ளன? ஏரிகள் குளங்கள் ஓடைகளில் எவை இந்த திட்ட பகுதிக்குள் உள்ளது? இயற்கையான மழை நீர் வடிகால் பாதைகள் பாதிக்கப்படுமா? விவசாய பாசன ஏரிகளுக்கு விமான நிலைய பகுதி எவ்வளவு அருகில் உள்ளது? என பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கிறது.
அது மட்டும் அல்லாமல் விமான நிலையம் அமைக்கப்பட உள்ள இடம் எது? அந்த இடத்தில் யார் யாரின் நிலங்கள் வருகிறது என்ற கேள்விகளும் இருக்கிறது. விஜய் அரசு சொன்னது போல விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் தேவையில்லை என்றால்.. செய்யூரில் இருக்கும் 65 சதவீத விவசாய நிலங்கள். கும்மிடிப்பூண்டியில் இருக்கும் 50 சதவீத விவசாய நிலங்களும் இந்த புதிய விமான நிலைய திட்டத்தால் பாதிக்கப்படாதா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்த கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசு உரிய விடை தருமா? என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications
