அடங்க மறுக்கும் அதிகாரிகள்.. அத்துமீறும் ஊழியர்கள்! இனி 3 தடவை தான் வார்னிங்..சாட்டையை எடுத்த விஜய்!
சென்னை: டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்போர் மீது நடவடிக்கை கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் முதல் முறை தவறு செய்வோர் ஒரு மாத தற்காலிக பணிநீக்கம். இரண்டாவது ஒரு முறை தவறு செய்தால் மூன்று மாத தற்காலிக பணிநீக்கம், மூன்றாம் முறை தவறு செய்தால் குற்ற குறிப்பானை வழங்கப்படும் என எச்சரித்துள்ளார் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் நந்தகுமார். மேலும் பத்து ரூபாய் மற்றும் அதற்கு மேல் கூடுதலாக வெற்றால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார். சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு போதைப்பொருள் தடுப்பு ஆகிய துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என அவர் கூறியிருக்கிறார்.

சொன்னது போலவே டாஸ்மாக் விவகாரத்தில் விஜய் மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், கல்லூரிகள் பேருந்து நிலையங்களுக்கு 500 மீட்டர் சுற்றளவில் இருக்கும் 717 மது கடைகளை மூட உத்தரவிட்டார்.
டாஸ்மாக்
இது பெண்களிடைய பெரும் வரவேற்பை பெற்றது. இது மட்டுமல்லாமல் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்கக் கூடாது என்ற ஏற்கனவே இருக்கும் விதியை மிகக் கடுமையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் அடுத்த அதிரடியாக டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்கினால் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நடவடிக்கை எடுக்காத உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது டாஸ்மார்க் நிர்வாகம்.
நந்தகுமார்
இதுதொடர்பாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் நந்தகுமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், டாஸ்மாக் கடைகளில் முறை கேடுகளில் ஈடுபடுவோர் மீது கட்டம் கட்டமாக கடுமையான தண்டனைகள் வழங்கப்படவுள்ளன. அதன்படி, முதல்முறை கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பணியாளர் 1 மாத காலத்திற்குத் தற்காலிக பணிநீக்கம் (Suspension) செய்யப்படுவார்.
கூடுதல் விலை
ஒருவேளை அவர்கள் இரண்டாவது முறையும் அதே தவறைத் மீண்டும் செய்தால், அவர்களது தற்காலிக பணிநீக்கக் காலம் 3 மாதங்களாக அதிகரிக்கப்படும். தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் இதே தவறு செய்யும் பட்சத்தில், அவர்கள் உடனடியாகத் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுவதோடு, அவர்கள் மீது துறை ரீதியான குற்றக் குறிப்பாணையும் (Charge Memo) வழங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மது விற்பனை
இதுமட்டுமின்றி, கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்பவர்களுக்குக் கடுமையான பண அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோரிடம் 10 ரூபாய் அல்லது அதற்கு மேல் கூடுதல் விலை வசூலிக்கப்பட்டால், அந்தச் கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதத் தொகையானது குறிப்பிட்ட விகிதாச்சாரத்தின்படி வசூலிக்கப்படும்; அதாவது, அபராதத் தொகையில் 60 விழுக்காட்டை தவறிழைத்த விற்பனையாளரும், மீதமுள்ள 40 விழுக்காட்டை அந்தக் கடைக் கண்காணிப்பாளரும் (Supervisor) செலுத்த வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
டாஸ்மாக் தனியார்மயம்
இதற்கிடையே பாட்டிலுக்கு பத்து ரூபாய் விவகாரம் விஜய் அரசுக்கு பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது. எவ்வளவோ எச்சரித்தும் பல இடங்களில் இன்னும் டாஸ்மாக் மது கடைகளில் பத்து ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி வரும் நிலையில் அரசுக்கு தேவையற்ற கெட்ட பெயர் ஏற்படுவதை தவிர்க்க டாஸ்மாக் மது கடைகளை தனியார் மயமாக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications
