ரசிகர்களுக்கு நடிகர் விஜய் போட்ட ஆர்டர்! தமிழகம் முழுவதும் தளபதி விஜய் நூலகம்! மெகா ப்ளான்!
சென்னை: விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆரம்பிக்கப்பட்ட விஜய் பயிலகம் திட்டத்தை தொடர்ந்து மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் 'தளபதி விஜய் நூலகம்' திறக்குமாறு விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
நடிகர் விஜய் தனது அரசியல் வருகையை உறுதி செய்யும் விதமாக தான் இது போன்ற புதிய முன்னெடுப்புகளை செயல்படுத்தி வருகிறார்.

அதன் படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று இடங்களிலும், சென்னை கிழக்கு, வடசென்னை கிழக்கு, வடசென்னை வடக்கு பகுதிகளில் 11 இடங்களிலும் தளபதி விஜய் நூலகங்கள் நாளை திறக்கப்படுகின்றன. அதைத் தொடர்ந்து வருகின்ற 23ஆம் தேதி அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்து இடங்களிலும், கோவை மாவட்டத்தில் நான்கு இடங்களிலும், ஈரோடு மாவட்டத்தில் மூன்று இடங்களிலும் தென்காசி மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும் சேலம், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் மேற்கு, கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா 1 இடங்களிலும் தளபதி விஜய் நூலகங்கள் திறக்கப்பட உள்ளன.
முதலில் பயிலகம் ஆரம்பித்து கவனம் ஈர்த்த நடிகர் விஜய் இப்போது நூலகம் ஆரம்பித்து இளைஞர்கள், மாணவ, மாணவிகளின் ஆதரவை அறுவடை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார். விஜயின் எண்ணங்களுக்கும், யோசனைகளுக்கும் செயல்வடிவம் கொடுத்துவரும் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தான் தளபதி விஜய் நூலகங்களை தமிழகமெங்கும் திறக்கும் பொறுப்பை ஏற்று செயல்படுத்தி வருகிறார்.
முதலில் மாவட்ட அளவில் பெரு நகரங்களில் திறக்கப்படும் நூலகங்களை நாளடைவில் கிராமப்புறப் பகுதிகளிலும் திறப்பதற்கான திட்டத்தை கையில் வைத்துள்ளார் விஜய். இதனிடையே நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்த அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவராத சூழலிலும், அவரது ஒவ்வொரு நகர்வையும் அரசியல் கட்சிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கி அவர்களுடன் கலந்துரையாடிய நடிகர் விஜய், பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகிய 3 தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களை அறிந்துகொள்ள வேண்டும் என பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications