விஜய்யின் தவெகவுடன் தேமுதிக கூட்டணியா? ”ஜனநாயகன்” ரிலீஸ் அன்று கிளைமேக்ஸ்.. விஜய பிரபாகரன் பதில்
சென்னை: ஜனவரி 9 ஆம் தேதி விஜய் ஜனநாயகன் படம் பார்த்துக்கொண்டு இருப்பார். நான் மாநாட்டில் இருப்பேன் என விஜய பிரபாகரன் கூறினார். தமிழக வெற்றிக் கழகத்தோடு தான் கூட்டணியா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், "வரும் 9 ஆம் தேதி தேமுதிக மாநாட்டின் போது எல்லா கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.. அன்று தான் கிளைமேக்ஸ்" என்று அவர் கூறினார்.
தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என தற்போது 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக ஒரு பக்கம் பலமான கூட்டணியோடு உள்ளது. அதிமுக பாஜக கூட்டணி பலமானதாக பார்க்கப்பட்டாலும், இன்னும் பாமக, தேமுதிக அந்த கூட்டணியில் இணைவதாக உறுதிபட கூறவில்லை.

யாருடன் தேமுதிக கூட்டணி?
இதனால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இது மட்டும் இன்றி டிடிவி தினகரனின் அமமுக, ஓ பன்னீர்செல்வம் ஆகியோடும் என்.டி.ஏ கூட்டணியில் இன்னும் சேரவில்லை. மாறாக இருவரும் தவெகவுடன் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பொங்கலுக்கு பிறகு எங்கள் கூட்டணி நிலைப்பாட்டை சொல்வோம் என டிடிவியும், தை பிறந்தால் வழி பிறக்கும் என ஓபிஎஸ்சும் சொல்லிவிட்டனர்.
பிரேமலதா விஜயகாந்தின் தேமுதிக இந்த முறை அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா இல்லை திமுகவா இல்லை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமா என்பதும் இன்னும் சஸ்பென்ஸாகவே உள்ளது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும் இதுவரை யாருடன் கூட்டணி என்பதை வெளிப்படையாக சொல்லவில்லை. மாறாக நாங்கள் இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும் என்று சொல்லி வருகிறார்.
விஜய பிரபாகரன் பேட்டி
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக இளைஞரணி தலைவர் விஜய் பிரபாகரனிடமும், தேமுதிக விஜய்யுடன் கூட்டணி அமைக்குமா என கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:- கேப்டன் சொன்னதையே நான் திரும்ப சொல்கிறேன்.. அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது.. நிரந்தர எதிரியும் கிடையாது..
அதனால அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாது.. எனவே வரப்போகின்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்போம் என்பது குறித்து எங்க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஜனவரி 9 ஆம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் சொல்வார் என்று கூறியிருக்கிறார்.
விஜய் ஜனநாயகன் படம் பார்ப்பார்
இன்னைக்கு நாங்க சொல்லல.. நீண்ட நாட்களாகவே பொதுக்கூட்டத்திற்கு அப்புறம் தான் யாருடன் கூட்டணி என்று அறிவிப்போம் என சொல்லியிருக்கிறோம். ஜனவரி 9 ஆம் தேதி எங்க மாநாட்டில் யாருடன் கூட்டணி என்பதை சொல்வோம். ஜனவரி 15 க்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்கு. எங்களுடைய பணிகளை நாங்கள் செய்து வருகிறோம்.
தமிழக வெற்றிக் கழகத்தோடு கூட்டணியா என்று கேட்கிறீர்கள். அதற்கு வரும் 9 ஆம் தேதி விடை தெரிந்துவிடும்" என்றார். அப்போது வரும் 9 ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படம் வெளியாகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், "விஜய் ஜனநாயகன் படம் பார்த்துக்கொண்டு இருப்பார். நான் மாநாட்டில் இருப்பேன்" இதனால் நான் என்ன செய்ய முடியும்.. 9 ஆம் தேதி கிளைமேக்ஸ்.. வெயிட் பண்ணுங்க.. இவ்வாறு அவர் கூறினார்.
ஜனநாயகன் திரைப்படத்திற்கு பிறகும், பொங்கல் பண்டிகைக்கு பிறகும் தவெகவில் அதிகம் பேர் இணைவார்கள் என அக்கட்சியினர் கூறி வரும் நிலையில் தேமுதிகவும் தவெகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் சொல்கின்றனர்.












Click it and Unblock the Notifications