தலைவரான போது எம்.ஜி.ஆருக்கு 55 வயது! கருணாநிதிக்கு 43 வயது! விஜய்க்கு 49 வயது!
சென்னை: தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்குவதன் மூலம் தனது 49வது வயதில் புதிய தலைவராக உருவெடுத்திருக்கிறார் நடிகர் விஜய்.
மிகச் சரியான வயதில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை அவர் விடுத்துள்ளார். 40 வயது முதல் 50 வயதிற்குள் அரசியல் கட்சி தொடங்கிய தலைவர்களில் அண்ணா, கருணாநிதி, வரிசையில் விஜயும் கவனம் ஈர்த்திருக்கிறார்.

1949ஆம் ஆண்டு அண்ணாதுரை திமுகவை தொடங்கிய போது அவருக்கு வயது 40. கட்சி தொடங்குவதற்கு முன்னர் வரை சொற்பொழிவாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர், என்ற அடையாளங்களில் திகழ்ந்த அண்ணாதுரை, திமுகவை ஆரம்பித்த பிறகு தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக உருவெடுத்தார். திமுகவின் பொதுச்செயலாளராக மட்டுமே இருந்த இவர், தலைவர் பதவியை காலியாகவே வைத்திருந்தார் என்பது தனிக்கதை.
அண்ணாவின் மறைவுக்கு பிறகு திமுக தலைவராக கருணாநிதி பதவியேற்ற போது அவருக்கு வயது 43. அதே போல் ஸ்டாலின் எப்போதோ அரசியல் தலைவராக உருவெடுத்துவிட்டாலும் அதிகாரப்பூர்வமாக திமுக தலைவரான போது அவருக்கு வயது 64. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜெயலலிதா தனிப்பெரும் தலைவராக உருவெடுத்த போது அவருக்கு வயது வெறும் 42.
திமுகவிலிருந்து விலகி 1972ஆம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய போது அவருக்கு வயது 55. வன்னியர் சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த ராமதாஸ், 1989ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியை ஆரம்பித்த போது அவருக்கு வயது 50.
தமிழகத்திலேயே மிகவும் இளம் வயதில் அரசியல் தலைவரானவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் திருமாவளவன். 1991ஆம் ஆண்டு விசிகவை அவர் ஆரம்பித்த போது அவருக்கு வயது வெறும் 29. அதே வேளையில் தமிழ்நாட்டில் மிக அதிக வயதில் தலைவரானவர் என்ற பெயருக்கு சொந்தக்காரர் ஜிகே மூப்பனார். 1996ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸை அவர் ஆரம்பித்த போது அவருக்கு வயது 65. அதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்தார் என்பது தனிக்கதை.
அண்மையில் மறைந்த விஜயகாந்த் கடந்த 2005ஆம் ஆண்டு மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை ஆரம்பித்த போது அவருக்கு வயது 53. அதேபோல் கடந்த 2010ஆம் ஆண்டு சீமான் நாம் தமிழர் கட்சியை தொடங்கி இயக்குநரிலிருந்து தலைவர் அவதாரம் எடுத்த போது அவருக்கு வயது 44. மக்கள் நீதி மய்யத்தை கமல் ஆரம்பித்த போது அவருக்கு வயது 64.
கடந்த 2018ஆம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்களில் ஒருவராக டிடிடி தினகரன் வந்த போது அவருக்கு வயது 55. இப்படியாக பெரும்பாலானோர் 50 வயதை கடந்து தான் அரசிய தலைவர்களாக வந்தார்கள். 50 வயதை தொடுவதற்கு முன்னர், அதுவும் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பளம் வாங்கக் கூடிய சூழலில் அரசியல் கட்சி ஆரம்பித்து தமிழக அரசியல் வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறார் விஜய்.












Click it and Unblock the Notifications