Jana Nayagan: விஜய் ரசிகர்களுக்கு ஷாக் மேல் ஷாக்.. ஜனநாயகன் தேர்தலுக்கு முன்பு வெளியாகாது?
சென்னை: சென்சார் பிரச்சனையில் சிக்கியுள்ள நடிகர் விஜய்யின் ஜனநாயகன் (Jana Nayagan) திரைப்படம் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என்று கனடா விநியோகஸ்தர் York Cinemas அறிவித்துள்ளது. இதனால், விஜய்யின் ஜனநாயகன் படம் தற்போதைக்கு இந்தியாவிலும் ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லாமல் போய்விடுமோ என விஜய் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயின் ஜனநாயகன் திரைப்படம் சென்சார் சான்று கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் ஜனவரி 9 ஆம் தேதிக்கு வெளியிட முடியாமல் போனது. பொங்கல் பண்டிகைக்கு முன்பாக படத்தை ரிலீஸ் செய்ய பட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்ட நிலையில், தணிக்கை வாரியம் படத்தை மறுதணிக்கை செய்ய முடிவு செய்தது.

ஜனநாயகன் திரைப்படம் எப்போது ரிலீஸ்
ஆனால் இதனை எதிர்த்து பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் தனி நீதிபதி பிடி ஆஷா, படத்திற்கு உடனே யுஏ சான்று வழங்க வேண்டும் என்று சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டார். ஆனால் இதை எதிர்த்து சென்சார் போர்டு தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ததோடு, வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் மூலமாக தீர்வை நாடினால் கால தாமதம் ஏற்படும் என்று கருதிய ஜனநாயகன் படக்குழு சென்சார் வாரியத்திடம் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியது. இதனால் ஜனநாயகன் படம் எப்போது வெளியாகும் என்று உறுதி செய்ய முடியாத நிலை உள்ளது.
ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை
20 ஆம் தேதி படம் திரைக்கு வரலாம் என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், விஜய்யின் தெறி படம் அன்று ரீ ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஜனநாயகன் படம் தற்போதைக்கு ரிலீஸ் ஆகும் வாய்ப்பு மங்கிவிட்டதாக ரசிகர்கள் தரப்பில் பேச்சு எழுந்தது. விஜய் ரசிகர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படம் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என்று கனடா விநியோகஸ்தர் York சினிமாஸ் அறிவித்துள்ளது. முன்பதிவு செய்த அனைவரும் டிக்கெட்டுக்கான தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் ஷாக் மேல் ஷாக் அடைந்துள்ளனர்.
கனடா விநியோகஸ்தர் தரப்பு
பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டால் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துவிடும். விஜய் அரசியல் கட்சியின் தலைவராக இருப்பதால் அவரது படத்தை வெளியிட தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற வேண்டியிருக்கும்.
எனவே, தேர்தலுக்கு முன்பு ரிலீஸ் ஆவதில் சிக்கல் இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், கனடா விநியோகஸ்தர் தரப்பு இப்படியான ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருப்பது விஜய் ரசிகர்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications