“விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை என அவரே வெளிக்காட்டிக் கொள்கிறார்”.. திமுக கொடுத்த உடனடி பதிலடி!
சென்னை: "தனக்கு அரசியல் புரிதல் இல்லை என அவரே வெளிக்காட்டிக் கொள்கிறார்" என தவெக தலைவர் விஜய்யின் பேச்சுக்கு திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் பதில் கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் மொழி விவகாரத்தில் ஆளும் திமுகவும் மத்தியில் ஆளும் பாஜகவும் மக்களை ஏமாற்றி வருவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குற்றம் சாட்டினார். இரு கட்சிகளும் வெளிப்படையாக மோதிக் கொள்வது போல் நடித்து, மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தவெக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த், ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்று கட்சியின் தலைவர் விஜய் பேசுகையில், தனது கட்சியில் இளைஞர்களே அதிகம் உள்ளதாகவும், பண்ணையார்களை அரசியலில் இருந்து அகற்றுவதே தனது கட்சியின் முதல் வேலை என்றும் குறிப்பிட்டார். அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோர் கட்சி தொடங்கியபோது, அவர்களுக்குப் பின்னால் இளைஞர்களே பெரும் பலமாக இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
1967 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைப் போல, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் மிகப்பெரிய மாற்றத்தை தமிழக வெற்றிக் கழகம் ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார். இரு கட்சிகளும் மாறி மாறி ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி, பொய்யான கருத்துப்போரை நடத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தனிப்பட்ட முறையில் எந்த மொழியையும் கற்றுக் கொள்ளலாம் என்றும், ஆனால் அரசியல் ரீதியாக வேறு ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணிப்பதை தமிழக வெற்றிக் கழகம் எதிர்க்கும் என்றும் விஜய் தெரிவித்தார்.
இந்நிலையில், விஜய் பேச்சுக்கு திமுக செய்தி தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் பதில் கொடுத்துள்ளார். டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தனக்கு அரசியல் புரிதல் இல்லை என விஜய்யே வெளிக்காட்டிக் கொள்கிறார்.
1938 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சி போய் காங்கிரஸ் ஆட்சி வந்ததுமே இந்தி திணிக்கப்பட்டது. அப்போதே திராவிட இயக்கத் தலைவர்கள், தமிழறிஞர்கள் இந்திக்கு எதிராக போராட்டம் நடத்தி மக்களிடையே கருத்துகளைப் பரப்பினர். 1952ல் ராஜாஜி இந்தி மொழி கற்பிக்கப்படும் எனச் சொன்னபோதும் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலம் தொடர்பு மொழியாக நீடிக்கும் என அன்றைய பிரதமர் நேரு உத்தரவாதம் கொடுத்தார். பலர் தீயைக் கொளுத்திக்கொண்டு உயிர்நீத்தார்கள். பல தலைவர்கள் இந்தியை எதிர்த்து சிறை வாசம் அனுபவித்தனர்.
ஆட்சியை பிடித்ததுமே 1968ல் அறிஞர் அண்ணா, இருமொழிக் கொள்கை நீடிக்கும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார். கல்வியில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கைதான் இருக்கும் என்ற சட்டமே இருந்து வருகிறது. அதுதான் இன்று வரை தொடர்கிறது. அதை அழித்துவிடக்கூடாது என்பதுதான் எங்கள் வாதம். அதற்காக மீண்டும் போர்க்களத்தைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம் என்பதுதான் எங்கள் தலைவர் சொல்லியிருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "1949ல் தொடங்கப்பட்ட கட்சி திமுக. 1952 தேர்தலில் போட்டியிடவே இல்லை. மக்களுக்காக, கொள்கைக்காக தொடர்ந்து போராடி வரும் கட்சி திமுக. கட்சி ஆரம்பிப்பவர்கள் எல்லோரும் ஆட்சியில் இருக்கும் கட்சியைத் தான் திட்டுவார்கள். திமுக செய்தது எல்லாம் அவர்களுக்குத் தெரியாது, தெரியாத விஷயங்களைப் பற்றி பேசுகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications