பறந்த பாமக கொடி.. அன்புமணி ஆதரவு தெரிவிக்காத நிலையில் விஜய்யை வரவேற்க காத்திருந்த PMK தொண்டர்கள்!
சென்னை: தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் இன்று மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். பாமக யாருக்கும் ஆதரவு இல்லை எனத் தெரிவித்த நிலையில் விஜய்யை மின்னல் சித்தாமூரில் பாமக கொடியுடன் தொண்டர்கள் வரவேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் அக்டோபர் 6 ஆம் தேதி, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாதக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என ஐந்து முனை போட்டி உருவாகி உள்ளது.

இடைத்தேர்தல் நடக்கும் மதுராந்தகம் தொகுதியில் வன்னியர் சமூகத்தினரின் வாக்குகள் குறிப்பிட்ட அளவில் உள்ளன. அதனால் பாமக ஆதரவை பெறும் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கணிக்கப்படுகிறது.
பாமக தனித்துப் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், பாமக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாது என்று அன்புமணி தெரிவித்திருந்தார். மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முதல்வர் விஜய் ஏற்கனவே மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் மீண்டும் இன்று ரோடு ஷோ நடத்தினார். அப்போது வழிநெடுகிலும் முதல்வர் விஜய்க்கு பொதுமக்களும், ரசிகர்களும் பரிசுகளை வழங்கினர்.
மதுராந்தகம் ஊருக்குள் சென்ற முதல்வர் விஜய், அகிருந்த டீக்கடையில் அமர்ந்து ஊர் பெரியவர்களுடன் கலந்துரையாடி டீ அருந்தினார். அங்கிருந்து விவசாய நிலங்களுக்கு பார்வையிட சென்ற அவர், டிராக்டரில் நஞ்சை உழவு ஓட்டி விவசாயிகளின் கவனத்தை ஈர்த்தார்.
முதலமைச்சர் விஜய்யின் இடைத்தேர்தல் பரப்புரையின்போது, பாமக கட்சிக் கொடியுடன் விஜய்யை வரவேற்றுள்ளனர். கடமலைப்புத்தூர், மின்னல் சித்தாமூர் உள்ளிட்ட இடங்களில் பாமக கொடியுடன் விஜய்யை வரவேற்றுள்ளனர். விஜய் பிரச்சாரத்தின்போது பாமக கொடி பறந்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாமக தலைவர் அன்புமணி முன்னர், "மரகதம் குமரவேல் இனி மதுராந்தகத்திற்குள் நுழைய முடியாது. மரகதம் குமரவேல், பாமக பங்களிப்புடன் தான் வெற்றி பெற்றார். பாமகவினர் அவருக்காக கடுமையாக பணியாற்றி வெற்றி பெற வைத்தார்கள்.
முதலமைச்சர் விஜய் அவர்களே.. நல்லாட்சி வேண்டும் என்றுதான் உங்களை தேர்வு செய்தார்கள்.. மக்களை அலட்சியப்படுத்தாதீர்கள். உங்களுக்கு வாக்களித்த அனைவரும் இடைத்தேர்தலில் உங்களுக்கு எதிராக வாக்களிப்பார்கள்" எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
