முதல்வர் விஜய்யுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் திடீர் சந்திப்பு
சென்னை: கடந்த சில நாட்களாகவே முதல்வர் விஜய் பிரதமர் வேட்பாளர் என்று சோஷியல் மீடியாக்களில் டிரெண்ட் ஆகி வரும் நிலையில் தவெக அமைச்சர்களும் இதே கருத்தை பேசி வந்தது காங்கிரஸ் கட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் முதல்வர் விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். இதில் எம்பி பிரவீன் சக்கரவர்த்தியும் உடன் இருந்தார்.
தமிழக முதல்வர் விஜய்யை காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் சந்தித்து பேசினார். சென்னை தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்ற கருத்துகணிப்பு சமீபத்தில் வெளியானது. இதில், மூன்றாம் இடத்தில் விஜய் பெயர் இடம் பெற்று இருந்தது. இந்த விவகாரத்திற்கு முன்பு இருந்தே, தவெக அமைச்சர்கள் சிலரும் விஜய் தான் அடுத்த பிரதமர் என்று பேசி வந்தனர்.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டனியில் உள்ள அதே நேரத்தில், விஜய்தான் அடுத்த பிரதமர் என்று பேசியது தவெக - காங்கிரஸ் கூட்டணிக்குள் புகைச்சலை கிளப்பியது. காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வோம் என்றார். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி நடத்தி வரக்கூடிய நிலையில், இந்த கருத்து மோதல் தமிழக அரசியல் வட்டாரத்திலும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த பரப்புக்கு நடுவே இன்று தமிழக முதல்வர் விஜய்யை மாணிக்கம் தாகூர் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது மாணிக்கம் தாகூருடன், பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்ட எம்பிக்களும் உடன் இருந்தனர். வீட்டு வசதி மற்றும் நகர்புற நாடாளுமன்ற நிலைக்குழுவில் உறுப்பினராக மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் நிலையில், அது தொடர்பாக தலைமை செயலகம் வந்து முதல்வரை சந்தித்து இருப்பதாக சொல்லப்பட்டாலும், தற்போதைய அரசியல் சூழலில் விஜய் - மாணிக்கம் தாகூர் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சமீபத்திய விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த சந்திப்பு அமையும் என்றும், அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கூறப்படுகிறது. காங்கிரஸ் எம்பி பிரவீன் சக்கரவர்த்தி, ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் விஜய்க்கு நெருக்கமான நபராக அறியப்படுகிறார். எனவே, மாணிக்கம் தாகூருடன் முதல்வர் விஜய், பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து இருப்பது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications
