விஜய்யை பார்க்க.. விமானத்தில் சென்னை வந்த பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர்.. என்ன காரணம்?
சென்னை: சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் விஜய், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார். கரூரில் இருந்து ஆம்னி பேருந்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும், 8 பேரின் குடும்பத்தினர் இன்று விமானம் மூலமாக சென்னை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை, தவெக தலைவர் விஜய் இன்று தனிப்பட்ட முறையில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார். செப்டம்பர் 27 ஆம் தேதி நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை, ஒரு மாதத்திற்குப் பிறகு விஜய் இன்று சந்திக்கிறார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே தவெக சார்பில், ரூ.20 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூரில் மக்களை சந்தித்தார் தவெக தலைவர் விஜௌ. அப்போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசல் காரணமாக பொதுமக்கள் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளை எதிர்கொண்டு, 41 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கரூர் விரைந்தனர். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.
தன்னை காண வந்த 41 பேர் உயிரிழந்த சூழலிலும், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூட கூறாமல், விஜய் சென்னை திரும்பியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமூக வலைதளத்தில் கூட 2நாட்களுக்குப் பிறகே இரங்கல் தெரிவிக்க, பல்வேறு தரப்பினரும் விஜய்யை கடுமையாக விமர்சித்தனர்.
கரூர் துயர சம்பவம் குறித்து கேட்டறிந்ததும் உடனடியாக அங்கு செல்ல விஜய் முற்பட்டதாகவும், ஆனால் அவர் அங்கு வந்தால் நிலைமை மோசமடையக்கூடும் என போலீசார் அறிவுறுத்தியதாகவும், தவெக சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதுபோக, பாதிக்கப்பட்டவர்களை கரூரிலேயே வைத்து பார்க்க விஜய் திட்டமிட்டு, அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகளும் தொடங்கப்பட்டன.
ஆனால், ஆளுங்கட்சியின் அழுத்தம் காரணமாக தங்களுக்கு யாரும் மண்டபங்களையும், அரங்குகளையும் ஒதுக்க முன்வரவில்லை என்றும் தவெக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இத்தகைய பல்வேறு விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் மற்றும் அதிருப்திக்கு மத்தியில் தான், பாதிக்கப்பட்டவர்களை விஜய் இன்று மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளார்.
இதற்காக கட்சி நிர்வாகிகள் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் செல்ல கரூரில் இருந்து ஆம்னி பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்தனர். கரூர் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் 25-க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினர் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த 10 பேரின் குடும்பத்தினர் அந்தந்த பகுதிகளில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களும் உடன் சென்றுள்ளன.
இவர்கள் தவிர கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 குடும்பத்தினரை நேற்று தவெக நிர்வாகிகள் பேருந்தில் அழைத்து செல்லவில்லை. அவர்களது குடும்ப வழக்கப்படி குடும்ப உறுப்பினர் இறந்து 30 நாட்கள் ஆனதும் சடங்கு நடத்துவதால் நேற்று வரை வெளியே எங்கும் செல்லக் கூடாதாம்.
இதனால் அவர்கள் இன்று காலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து மாமல்லபுரம் ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க, தனது வீட்டில் இருந்து கிளம்பி மாமல்லபுரம் சென்றுள்ளார் விஜய்.












Click it and Unblock the Notifications