திருமாவளவன், காதர் மொய்தீனை சந்திக்காமல் வீட்டுக்கு திரும்பிய விஜய்.. என்ன காரணம்?
சென்னை: தங்களுக்கு ஆதரவளித்த சிபிஐ, சிபிஐஎம் கட்சி அலுவலகங்களுக்குச் சென்று தலைவர்களைச் சந்தித்த தவெக தலைவர் விஜய், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோரை சந்திக்காமல் திரும்பியுள்ளார்.
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக, ஆட்சியமைப்பதற்கு பெரும்பான்மை கிடைக்காமல் திணறி வந்தது. இந்தநிலையில் தவெகவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது.

இதையடுத்து 6 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டது. இன்று சிபிஎம் (2), சிபிஐ (2), ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இரு கட்சிகளும், தவெக ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தன. தவெகவுக்கு ஆதரவளிப்பதாக கடிதமும் அளித்தன.
அதைத்தொடர்ந்து, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளும் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தன. இந்த சூழலில் இன்று மாலை மூன்றாவது முறையாக ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் விஜய். நாளை காலை 11 மணிக்கு விஜய் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.
ஆளுநரை சந்தித்ததைத் தொடர்ந்து சிபிஐ, சிபிஐஎம் கட்சி அலுவலகங்களுக்கு சென்ற விஜய் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த இடதுசாரி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார். முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு சென்ற விஜய், அங்கு மறைந்த நல்லக்கண்ணு புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார்.
பின்னர் சிபிஐஎம் அலுவலகத்துக்கு சென்ற விஜய்யை பெ.சண்முகம், லே பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய், அங்கிருந்து புறப்பட்டார்.
தங்களுக்கு ஆதரவளித்த சிபிஐ, சிபிஐஎம் கட்சி அலுவலகங்களுக்குச் சென்று தலைவர்களைச் சந்தித்த தவெக தலைவர் விஜய், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோரை சந்திக்காமல் திரும்பியுள்ளார்.
விசிக, ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகள் இன்னும் ஆதரவு கடிதம் வழங்கவில்லை. நாளைதான் கடிதங்களை வழங்க உள்ளனர். தவெக ஆட்சியமைக்க இதுவரை விசிக, ஐ.யூ.எம்.எல் ஆதரவு கடிதம் வழங்காததால், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோரை சந்திக்காமல் திரும்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications
