100 தொகுதிகள்.. முதற்கட்ட சுற்றுப்பயணத்திற்கு தயாரான விஜய்.. டெல்டாவில் தவெகவின் மெகா திட்டம்!
சென்னை: மதுரையில் தவெகவின் 2வது மாநில மாநாடு முடிவடைந்த நிலையில், அடுத்தக் கட்டமாக அக்கட்சியின் தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயாராகி வருகிறார். முதற்கட்டமாக 100 தொகுதிகளில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பணிகளில் தவெக நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து களமிறங்க உள்ள தவெகவும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

ஏற்கனவே மதுரையில் தவெகவின் 2வது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்த மாநாடு அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த மாநாடு முடிவடைந்து 15 நாட்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், விஜய் அடுத்தக் கட்ட கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே செப்டம்பரில் விஜய்யின் சுற்றுப்பயணம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
பெரியார் பிறந்தநாளன்று ஈரோட்டில் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதேபோல் விஜய் தனக்கான பிரச்சார வாகனத்தையும் வாங்கி தயார் செய்து வருகிறார். அதன் வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகியது. கிட்டத்தட்ட அதை ஒரு பிரச்சார வாகனமாக மட்டுமல்லாமல், ஒரு கேரவனாக வடிவமைக்க திட்டமிட்டு வருகிறார்.
இந்த நிலையில் விஜய் முதற்கட்டமாக 100 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. செப்டம்பர் 2வது வாரத்திற்கு பின் விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தின்போது தொழிலதிபர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்களை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல் சில சந்திப்புகளை திருமண மண்டபங்களில் நடத்தவும் விஜய் திட்டமிட்டு வருகிறார். அதற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மக்கள் சந்திப்பு பயணத்தை 3 கட்டமாக முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக டெல்டா மாவட்டங்களில் விஜய் மக்களை சந்திக்க இருக்கிறார்.
டெல்டா மாவட்டங்களில் விஜய்க்கு மிகப்பெரிய ஆதரவு இருந்து வருகிறது. அதேபோல் விக்கிரவாண்டி, கோவை, மதுரை என்று வட மாவட்டம், கொங்கு மண்டலம், தென் மாவட்டம் என்று விஜய் பயணித்துவிட்டார். இன்னும் டெல்டா மாவட்டத்திற்கு செல்லாததால், மக்கள் சந்திப்பு பயணத்தை டெல்டாவில் தொடங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications