அறிவித்தார் விஜய்.. "எந்த கட்சி உடனும் கூட்டணி இல்லை.. தவெக தனித்து போட்டியிடும்.." திடீர் யூடர்ன்
சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகளும் தங்கள் கூட்டணியை இறுதி செய்து வருகிறது. இதற்கிடையே நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று விஜய் அறிவித்துள்ளார். தவெக தனித்துப் போட்டியிட்டு, தனிப்பெரும்பான்மையைப் பெறும் என்றும் விஜய் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அடுத்த மாதம் தொடக்கத்தில் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. இதில் தவெக கூட்டணிக்காகத் தீவிரமாக முயன்று வருகிறது. இருப்பினும், இதுவரை எந்தவொரு கட்சியும் தவெகவுடன் கூட்டணிக்கு வரவில்லை.

விஜய் பேட்டி
இதற்கிடையே தேர்தல் மட்டும் கூட்டணி தொடர்பாக இந்தியா டுடே ஆங்கில ஊடகத்திற்கு தவெக தலைவர் விஜய் பேட்டியளித்துள்ளார். அதில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும் சரி, பின்பும் சரி யாருடனும் கூட்டணி இல்லை என்று விஜய் கூறியுள்ளார். மேலும், இந்தியா கூட்டணி அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக இணையாது என்றார்.
மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்கள்
தவெக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று நான் நம்புகிறேன் என்ற விஜய், மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றும் நான் நிச்சயமாகத் தேர்தலில் வெல்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தனித்து போட்டி
இது தொடர்பாக அவர் இந்தியா டுடே ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும் சரி, பின்பும் சரி தமிழக வெற்றிக் கழகம் "இந்தியா" கூட்டணி அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையாது. தமிழ்நாட்டில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.. நான் நிச்சயமாக வெல்வேன். மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். தவெகவின் 'விசில்' சின்னத்தை மக்கள் ஆதரிப்பார்கள்.
விசில் வெல்லும்
தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்ய முயல்வார்கள். ஆனால், அதை எல்லாம் தாண்டி வாக்காளர்கள் இறுதியில் விசில் சின்னத்தையே தேர்ந்தெடுப்பார்கள்" என்றார்.
அரசியலில் நுழைவது குறித்து எப்போது முடிவு செய்தீர்கள் என்ற கேள்விக்கு, "கொரோனா காலகட்டத்தில்தான் நான் அரசியலுக்கு வர முடிவு செய்தேன். இதுவே சரியான நேரம் என்பதை அறிந்து கொண்டேன்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications