தமிழ்நாட்டையே அதிர வைத்த திருமணம்.. தவெக வேட்பாளரான ஆர்.எஸ்.முருகன்.. விஜய் சீட் கொடுத்த பின்னணி!
சென்னை: தவெகவில் இணைந்த சில மணி நேரங்களிலேயே தொழிலதிபர் ஆர்.எஸ்.முருகன் நெல்லை தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக, அதிமுக என்று எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அரசு ஒப்பந்தங்களை எடுக்கும் அளவிற்கு செல்வாக்கு பெற்ற ஆர்.எஸ்.முருகனுக்கு சீட் கொடுத்திருப்பது பேசுபொருளாகியது.
தமிழ்நாடே திரும்பி பார்க்கும் அளவிற்கு நெல்லை மாவட்டத்தில் ஒரு திருமணம் 2024ஆம் ஆண்டு நடைபெற்றது. அதாவது எழுத்தாளரும், நடிகருமான வேலு ராமமூர்த்தியின் பேத்திக்கும், தொழிலதிபர் ஆர்.எஸ்.முருகன் மகனுக்கும் நடந்த திருமணத்தை கண்டு தமிழ்நாடே வியந்தது. வேலு ராமமூர்த்தி பேத்தி வைஷ்ணவிக்கு சுமார் 5 கிலோ தங்கம் அளிக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமல்லாமல் ராஜா காலத்து திருமணத்தை போல் திரும்பி பார்க்கும் இடமெல்லாம் பிரம்மாண்டம் கூட்டியது. விருந்தினர்களுக்கு சாப்பாடே வெள்ளி தட்டி பரிமாறப்பட்டது. அதேபோல் அவர்களுக்கு தாம்பூலத்துடன் ரூ.1,500 பணம் வைத்து கொடுக்கப்பட்டது. பிரம்மாண்ட ஊர்வலம், விஐபிக்களின் வாழ்த்து மழை என்று நெல்லை மாவட்டமே அதிர்ந்து போனது.
தொழிலதிபர் ஆர்.எஸ்.முருகன் அதிமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலை துறையில் அரசு ஒப்பந்தங்களை கைப்பற்றி வந்தனர். ஒரு கட்டத்தில் தென் மாவட்டங்களில் நெடுஞ்சாலை துறையில் யார் ஒப்பந்தம் எடுக்க வேண்டும் என்ற முடிவை எடுக்கும் நபராகவே மாறினார். திமுக, அதிமுக என்று யார் ஆட்சிக்கு வந்தாலும், ஆர்.எஸ்.முருகன் செல்வாக்கு குறையவே இல்லை.
தென் மாவட்டத்தில் ஆர்.எஸ்.எம் குடும்பத்தை தெரியாதவர்களே இல்லை என்ற நிலை வந்தது. நாங்குநேரியை அடுத்த விஜயநாராயணம் தான் ஆர்.எஸ்.முருகனுக்கு சொந்த ஊர். இந்த நிலையில் தவெக சார்பாக ஆர்.எஸ்.முருகன் நெல்லை தொகுதி வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார். காலையில் தவெகவில் இணைந்த அவரின் பெயரை நெல்லை தொகுதி வேட்பாளராக விஜய் தேர்வு செய்துள்ளார்.
காலையில் கட்சியில் சேர்ந்தவருக்கு சீட் கொடுப்பதா என்ற குரல்கள் எழுந்தாலும், விஜய்யின் தேர்வுக்கு பின்னணியில் சில முக்கிய காரணங்கள் உள்ளன. அதாவது நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தவெக வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவுகளை ஆர்.எஸ்.முருகன் கவனித்து கொள்வதாக உறுதி கொடுத்துள்ளதாகவும் விவரம் அறிந்தவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications