Vijay: புஸ்ஸி ஆனந்துக்கு முன்ஜாமீன் கிடைக்காவிட்டால்! டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட போகும் விஜய்?
சென்னை: கரூரில் தவெக தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசல் வழக்கில் தன்னை கைது செய்ய வலியுறுத்தி சென்னை டிஜிபி அலுவலகத்தை தவெக தலைவர் விஜய் முற்றுகையிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அவர் தீவிர ஆலோசனையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச் செயலாளர் என். ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்) மற்றும் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர், கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க, உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்துள்ளனர்.

கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். இந்தக் கூட்டத்தை நடத்திய பொறுப்பாளர்கள் என்ற அடிப்படையில், புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி. மதியழகன் ஆகியோர் மீது இந்திய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ், கொலைக்கு நிகரான குற்றவியல் மனிதக்கொலை (culpable homicide not amounting to murder), உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
இருவர் கைது
இந்த வழக்கில் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் மற்றொரு நிர்வாகி மாசி பவுன்ராஜ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் தலைமறைவாக உள்ளனர். அவர்களைக் கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தவெக தரப்பு வாதம்
இதனால் தாங்கள் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில், இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். கூட்ட நெரிசலானது திட்டமிட்ட செயல் அல்ல, ஒரு விபத்து. தங்கள் கட்சித் தொண்டர்களைக் கொல்லும் எண்ணம் தங்களுக்கு இல்லை.
கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முழுப் பொறுப்பும் அரசுக்கும், போதிய பாதுகாப்பு அளிக்கத் தவறிய காவல்துறைக்குமே உள்ளது. கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதற்கு, காவல்துறை நடத்திய தடியடியே காரணம்.
அரசுத் தரப்பு வாதம்
அனுமதியை மீறி கூட்டம் நடத்தப்பட்டது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட மிக அதிகமானோர் திரண்டனர். நீண்ட நேரம் காத்திருந்ததாலும், போதிய குடிநீர், கழிப்பறை வசதிகளை ஏற்பாட்டாளர்கள் வழங்காததாலும் பலர் சோர்வடைந்தனர்.
கட்சித் தொண்டர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டதால்தான் நெரிசல் ஏற்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து கட்சித் தலைவர்கள் ஓடிவிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, "இந்தச் சம்பவம் நீதிமன்றத்தின் மனசாட்சியைக் கலங்கடிக்கிறது.
41 உயிர்கள் பலியானது மிகவும் தீவிரமான விஷயம்; விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் நிலையை நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது," என்று கூறி, இருவரின் முன்ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சம்பவம் குறித்து முழுமையாக விசாரிப்பதற்காக, மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) ஒன்றை அமைத்து உத்தரவிட்டது. விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் "சம்பவ இடத்திலிருந்து ஓடிவிட்டதைக்" கண்டித்தது.
சம்பவத்தில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டபோது, கட்சித் தலைவர்கள் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என்று கூறி, அவர்களின் conduct-ஐ நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்த தற்காலிகமாக தடை விதித்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் இருவரும், கைது நடவடிக்கையில் இருந்து விலக்கு பெற, உச்ச நீதிமன்றத்தை நாடி மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போராட விஜய் முடிவு?
விஜய் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் கைது நடவடிக்கையை எதிர்கொள்ள அவர் தயாராக இருக்கிறாராம். உச்சநீதிமன்றத்தில் ஒரு வேளை புஸ்ஸி ஆனந்துக்கும் நிர்மல்குமாருக்கும் முன் ஜாமீன் கிடைக்காத பட்சத்தில் சென்னை டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டு தன்னையும் கைது செய்யுங்கள் என விஜய் முறையிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications