விஜய் விட மாட்டார் போலயே.. காலையில் ஆ.ராசா, சேகர்பாபு! மாலையில் வசந்த கார்த்திகேயன்! பாய்ந்த வழக்கு!
சென்னை: தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், இரட்டை அர்த்தம் மற்றும் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியும் பேசியதாக எழுந்த புகாரில், ரிஷிவந்தியம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே திமுக எம்பி ஆ ராசா. முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில். தற்போது 3வது திமுக புள்ளியாக வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்கு பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவர் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் விஜய் மோசமான உடல் மொழியுடன் பேசியதாக புகார் எழுந்தது.

அதனை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கட்சி தலைமை அறிவுறுத்தியது. அதன்படி தமிழகத்தின் தலைநகரங்களில் திமுகவினர் விஜய்க்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.
திமுக போராட்டம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக போராட்டம் நடத்திய நிலையில் சென்னையில் சேகர்பாபு, ஆ ராசா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் முதல்வர் விஜய் குறித்தும், அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் குறித்தும் அவதூறாக பேசியதாக புகார் கூறினர் தவெகவினர். இதை அடுத்து அவர்கள் இருவர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது,
வசந்தம் கார்த்திகேயன்
அடுத்த அதிரடியாக திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகே கடந்த செப்டம்பர் 12-ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசிய சில கருத்துகள் மற்றும் அவரது செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
முதலமைச்சர் விஜய்
இதில் திமுக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.வுமான வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய வசந்தம் கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக விஜய் ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியதுடன், முதலமைச்சர் விஜயை விமர்சிக்கும் வகையில் இரட்டை அர்த்தம் கொண்டதாக கூறப்படும் வார்த்தைகளை பயன்படுத்தியதாக வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
தவெக புகார்
அவரது பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வசந்தம் கார்த்திகேயன் முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக குறித்து தரம் தாழ்ந்தும், அவதூறாகவும் பேசியதாகவும், அவரது பேச்சு வன்முறையைத் தூண்டும் வகையிலும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் இருந்ததாகவும் தவெக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
4 பிரிவுகளில் வழக்கு
இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரில், வசந்தம் கார்த்திகேயனின் பேச்சு இரு தரப்பினரிடையே மோதலைத் தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி போலீசார் வசந்தம் கார்த்திகேயன் மீது ஆபாசமாக பேசுதல், அவதூறாக பேசுதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications
