சல்லி சல்லியாய் நொறுங்கும் கூட்டணி..விஜய்க்கு எகிறும் எதிர்பார்ப்பு! பாஜகவுக்கு Bye சொல்லும் இபிஎஸ்?
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மீது விமர்சனங்கள் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் அந்தக் கட்சியை கூட்டணியில் சேர்க்க சில கட்சிகள் தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றன. அதிமுக பாஜக கூட்டணியில் விஜய் இணையலாம் என சொல்லப்படும் நிலையில் அந்தக் கூட்டணியால் விஜய்க்கு சில நன்மைகள் இருக்கின்றன. அதே நேரத்தில் விஜய் அதிமுக கூட்டணிக்கு சென்றால் சில கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்படும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் தனது முதல் தேர்தலை சந்திக்க இருக்கிறார். கடந்த ஆண்டு கட்சியை ஆரம்பித்தாலும் 2026 சட்டமன்ற தேர்தல் தான் விஜய் சந்திக்கப் போகும் முதல் தேர்தல். இடையில் நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்கள் நடந்தாலும் விஜய் அதனை கண்டு கொள்ளவில்லை.
முதல் தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற வேண்டும் என திட்டமிட்ட விஜய் அதற்காக வாரம் தோறும் மக்களை சந்திக்க திட்டமிட்டு இருந்தார். மாவட்ட வாரியாக சனிக்கிழமைகளில் விஜய்யின் பிரச்சார திட்டம் தயாரிக்கப்பட்டு இருந்தது.

விஜய் அரசியல்
திருச்சியில் தொடங்கிய சுற்றுப்பயணம் திருவாரூர் நாகை என பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் கரூரில் அதற்கு சிக்கல் எழுந்தது. விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் விஜய்யின் பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. மேலும் விஜய் மீதான விமர்சனமும் பொதுவெளியில் அதிகரித்து இருக்கிறது. விஜய்க்கு தலைமை பண்பே இல்லை என நீதிமன்றம் விமர்சித்ததையும் கவனிக்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகம்
இது ஒருபுறம் இருக்க விஜய்யை கூட்டணி சேர்க்க வேண்டுமென சில கட்சிகள் தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றன. குறிப்பாக அதிமுக பாஜக முன்னணியில் இருக்கிறது. தமிழக வெற்றி கழகம் கூட்டணிக்கு வந்துவிட்டதைப் போலவே பேசி வருகிறார். எடப்பாடி பழனிசாமி அதே நேரத்தில் கொள்கை எதிரி என அறிவித்த பாஜகவுடன் விஜய் கூட்டணி சேர மாட்டார் எனவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக, பாஜக கூட்டணி அமைந்தால் பல கட்சிகளுக்கு சிக்கல் தான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
அதிமுக பாஜக கூட்டணி
உதாரணத்திற்கு அதிமுக பாஜக கூட்டணியிலேயே விரிசல் விழும் என்கின்றனர். தேசிய அளவில் பாஜகவை கொள்கை எதிரி என்றும் திமுகவை தமிழக அளவில் அரசியல் எதிரி என்றும் விஜய் குறிப்பிட்டார். இதனால் அதிமுக கூட்டணியில் சேர முடியாத நிலை விஜய்க்கு இருக்கிறது. முதல் தேர்தலிலேயே கொள்கையை விட்டுக் கொடுத்து விட்டார் என விஜய் மீது விமர்சனங்களும், எனவே விஜய்க்காக பாஜகவை எடப்பாடி பழனிச்சாமி கழட்டிவிடலாம் எனவும் சொல்லப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலிலும் மக்களவைத் தேர்தலிலும் பாஜகவால் தான் அதிமுக தோற்றது என்ற கருத்தும் நிலவுகிறது.
எடப்பாடி பழனிசாமி
இதனால் விஜய்க்காக எடப்பாடி பழனிச்சாமி பாஜகவை விட்டுக் கொடுத்து விடுவார் என்கின்றனர். மேலும் விஜய் தனித்து நின்றால் அவருடன் கூட்டணி அமைக்கலாம் என காங்கிரஸ், டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் முயன்று வருகின்றனர். ஆனால் அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைத்து விட்டால் இந்த கூட்டணி வாய்ப்புகள் நடக்காது. எனவே விஜய் அதிமுகவுடன் கூட்டணி சேர்வதால் அவருக்கு பிரச்சனை இருக்கிறதோ இல்லையோ அவரால் மற்ற கட்சிகளுக்கு பிரச்சனை இருக்கிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.












Click it and Unblock the Notifications