பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி! தவெக சார்பில் நாளை கிறிஸ்துமஸ் விழா! விஜய் பங்கேற்கிறார்!
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தனித்தனியாக கிறிஸ்துமஸ் விழாக்களை நடத்தி வருகின்றன. அந்த வரிசையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள 'ஃபோர் பாயிண்ட்ஸ்' கன்வென்ஷன் சென்டரில் நாளை (திங்கட்கிழமை) கிறிஸ்துமஸ் விழா நடைபெற உள்ளது.
இதில் அனுமதி சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. த.வெ.க தொடங்கப்பட்ட பிறகு, கட்சி சார்பில் நடைபெறும் முதல் மத நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கிறிஸ்துமஸ் விழாவில், த.வெ.க தலைவர் விஜய் நேரில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். கட்சி தொடங்கிய பிறகு அவர் பேசும் உரைகள் அனைத்தும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், இந்த விழாவில் அவர் என்ன பேசப்போகிறார் என்பதில் தொண்டர்களும் அரசியல் பார்வையாளர்களும் ஆவலுடன் உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் த.வெ.க-வின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள், மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். இருப்பினும், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் வசதி மற்றும் பாதுகாப்பு காரணங்களால், இந்த விழாவில் கலந்துகொள்ள 1,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக முன்கூட்டியே அழைப்பிதழ்கள் மற்றும் அனுமதி பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கிறிஸ்துமஸ் விழாவின் முக்கிய அம்சமாக, நலத்திட்ட உதவிகளை த.வெ.க தலைவர் விஜய் வழங்க உள்ளார். ஏழை மற்றும் எளிய மக்களுக்கு உதவும் வகையில், கல்வி, மருத்துவம் மற்றும் அடிப்படை தேவைகளுக்கான உதவிகள் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கடந்த சில மாதங்களாக விஜய் தொடர்ந்து சமூக நிகழ்வுகள், விழாக்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதன் தொடர்ச்சியாக, இந்த கிறிஸ்துமஸ் விழாவும் கட்சியின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய கட்டமாக அமைந்துள்ளதாக த.வெ.க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் சிறுபான்மை மக்களிடையே கட்சியின் தாக்கத்தை அதிகரிக்கும் வகையில் இந்த விழா அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications