பலரின் வேட்புமனு நிராகரிக்கப்படலாம்.. போச்சு விஜய் தவெகவிற்கு இருக்கும்... பெரிய சிக்கலே இதுதான்!
சென்னை: தமிழக அரசியல் களத்தில் 'ஆக்ஷன்' வேகம் காட்டிய தமிழக வெற்றி கழகம், இப்போது 'அபிடவிட்' சிக்கலில் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று.. தமிழக வெற்றிக் கழகம் கடுமையாக திணறிக்கொண்டு இருக்கிறது.
கட்சியின் தலைவர் விஜய்யே இரண்டு தொகுதிகளில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தந்து தேர்தல் களத்தில் சறுக்கியிருப்பதுதான் இப்போது கோட்டை வட்டாரத்தின் ஹாட் டாக்!

நாக்-அவுட் ஆகுமா த.வெ.க? - வேட்புமனு குளறுபடிகளில் சிக்கிய தளபதி!
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று கொள்கை முழக்கமிட்டு அரசியலில் குதித்த விஜய்க்கு, தேர்தல் ஆணையத்தின் 'ரூல்ஸ் புக்' இப்போது பெரிய சவாலாக மாறியிருக்கிறது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் களம் காணும் விஜய், தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் (Affidavit) இருக்கும் 'மலைக்கும் மடுவுக்குமான' வித்தியாசங்கள் தேர்தல் அதிகாரிகளையே தலைசுற்ற வைத்திருக்கின்றன.
வயது '51'ஆ... '52'ஆ? - குழப்பத்தில் த.வெ.க!
பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த மனுவில் தனது வயது 52 என்று குறிப்பிட்ட விஜய், திருச்சி கிழக்கில் தாக்கல் செய்த மனுவில் 51 என்று குறிப்பிட்டிருக்கிறார். "ஒரே வருஷத்துல ரெண்டு வயசா?" என ரத்தத்தின் ரத்தங்களே சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டு கலாய்க்கத் தொடங்கிவிட்டனர்.
சொத்து மதிப்பில் 'மில்லியன்' கணக்கில் மாற்றம்!
வயது கோளாறு ஒருபுறமிருக்க, சொத்து விவரங்களிலும் ஏகப்பட்ட ஓட்டைகள்.
பெரம்பூரில்: அசையா சொத்துக்களின் சந்தை மதிப்பு சுமார் 115 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
திருச்சி கிழக்கில்: அதே சொத்துக்களின் மதிப்பு திடீரென உயர்ந்து 220 கோடி ரூபாயாகக் காட்டப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, பெரம்பூர் மனுவில் விடுபட்டிருந்த மனைவி சங்கீதா, மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா ஆகியோரின் சொத்து விவரங்கள் திருச்சி மனுவில் 'திடீர்' என எட்டிப் பார்த்திருக்கின்றன. "பெரம்பூர்ல இல்லாத அக்கறை திருச்சி மேல ஏன்?" என எதிர்க்கட்சிகள் கேள்விகளை அடுக்கத் தொடங்கிவிட்டன.
வழக்குகளும்... மறைப்புகளும்!
பெரம்பூர் மனுவில் தனக்கு எதிராக 'எந்த வழக்கும் இல்லை' (Nil) என்று குறிப்பிட்ட விஜய், திருச்சி மனுவில் இரண்டு வழக்குகளைப் பட்டியலிட்டுள்ளார். மதுரையில் 2025-ல் நடந்த கட்சி மாநாட்டின் போது ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கும், பெரம்பூர் பிரச்சாரத்தின் போது விதிகளை மீறியதாகத் தொடரப்பட்ட வழக்கும் இதில் அடக்கம். "முன்னரே தெரிந்த வழக்கை ஏன் பெரம்பூரில் மறைக்க வேண்டும்?" என்பதே இப்போது எழுந்துள்ள பிரதான சிக்கல்.
நிர்வாகிகளின் நிலை... பரிதாபம்!
கட்சித் தலைவருக்கே இந்த நிலை என்றால், மாவட்டச் செயலாளர்களாக இருந்து இப்போது வேட்பாளர்களாக மாறியிருக்கும் த.வெ.க நிர்வாகிகளின் நிலை இன்னும் மோசம். முறையாகப் பிரமாணப் பத்திரங்களை நிரப்பத் தெரியாமல், பல இடங்களில் 'டம்மி' வேட்பாளர்கள் கூட இல்லாமல் த.வெ.க திணறி வருகிறது. இன்னும் பல இடங்களில் பார்மை நிரப்பி கூட வேட்பாளர்கள் கொடுக்கவில்லை.
"நாங்க எல்லாம் சினிமா ஷூட்டிங்னு நினைச்சுட்டோம் போல... ஆனா இது தேர்தல் களம்! சின்ன தவறு நடந்தாலும் வேட்புமனு தள்ளுபடியாகும் (Rejected) அபாயம் இருக்கு" என த.வெ.க-வின் சீனியர் நிர்வாகி ஒருவர் நம்மிடம் புலம்பித் தள்ளினார்.
நிலைமை விபரீதமாவதை உணர்ந்த விஜய், இப்போது பெரம்பூர் மற்றும் திருச்சி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் திருத்தப்பட்ட (Revised) வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருக்கிறார். ஆனாலும், ஆரம்பத்திலேயே இவ்வளவு குளறுபடிகள் நடந்திருப்பது 'அரசியல் முதிர்ச்சி' குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
திரையில் 'டயலாக்' பேசி கைதட்டல் வாங்குவது எளிது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் 'ஃபார்ம்-26'-ஐ பிழையில்லாமல் நிரப்புவதுதான் உண்மையான 'கிளைமாக்ஸ்' என்பதை விஜய் இப்போது உணர்ந்திருப்பார்!












Click it and Unblock the Notifications