குழந்தைகளுக்குமா? விஜயின் தவெகவில் உருவான 28 அணிகள்.. இளைஞர், பெண்கள், திருநங்கைகளுக்கு தனித்தனி அணி
சென்னை: தமிழக வெற்றி கழகத்தில் மாவட்ட செயலாளர் பட்டியல் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் நிலையில் பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோருடன் விஜய் தரப்பு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் 28 சார்பு அணிகள் உருவாக்கப்பட உள்ளது. அதில் குழந்தைகள் அணி, மூன்றாம் பாலினத்தவர் அணி ஆகியவை இடம் பெற்று இருப்பதாக பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை பிப்ரவரி மாதமே அறிவித்த நிலையில் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்றது. தொடர்ந்து மாணவர்கள் சந்திப்பு, நிர்வாகிகளுடன் ஆலோசனை, மாநில மாநாடு என பிசியாக இருந்த விஜய் தற்போது முழு நேர அரசியல்வாதியாக மாறி இருக்கிறார்.

4 கட்டங்களாக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் மாவட்ட வாரியாக மக்கள் பிரச்சனைகளை கண்டறிந்து அவர்களை நேரில் சந்தித்து கள அரசியல் செய்யவும் திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகள் தனியே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அமைப்பு ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய விஜய் திட்டமிட்டு இருக்கிறார். தமிழகத்தில் 234 தொகுதிகள் இருக்கும் நிலையில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் மாவட்ட செயலாளர் நியமனம் நடைபெற இருக்கிறது.
மேலும் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்டத் துணைச் செயலாளர் என தனது ரசிகர் மன்றத்தில் இருந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது. மேலும் துணைத் தலைவர், துணைச் செயலாளர் பதவிகளில் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிகளவு வாய்ப்பு தர திட்டமிடப்பட்டிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் 28 சார்பு அணிகளும் விஜய் கட்சியில் உருவாக்கப்பட இருப்பதாக ஒன் இந்தியா தமிழ் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் விஜய் கட்சியில் இருக்கும் அணிகள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது ஏற்கனவே கட்சியில் தேர்தல் விகுந்த வியூகங்களை வகுக்க ஜான் ஆரோக்கியராஜ், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் இருக்கும் நிலையில் தற்போது தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரும் களத்தில் இறங்கி இருக்கிறார். அவர் ஏற்கனவே தமிழகத்தில் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை விஜய் தரப்பிடம் தந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது விஜய் கட்சியில் 28 சார் அணிகள் என்னென்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் தகவல் தொழில்நுட்ப பிரிவு, வழக்கறிஞர் அணி, ஊடக அணி, கொள்கை பரப்பு மற்றும் பேச்சாளர் அணி, பயிற்சி மற்றும் தொண்டர்கள் முன்னேற்ற அணி, உறுப்பினர் சேர்க்கை அணி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அணி, வரலாற்று தரவு ஆய்வு மற்றும் உண்மை சரிபார்ப்பு அணி, திருநங்கைகள் அணி, மாற்றுத்திறனாளிகள் அணி, இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி, இளம் பெண்கள் அணி, குழந்தைகள் அணி, தொண்டர்கள் அணி, வர்த்தக அணி, மீனவர் அணி, நெசவாளர் அணி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அணி, உழைப்பாளர் அணி, தொழில் முனைவோர் அணி, வெளிநாடு வாழ் இந்தியர் அணி, மருத்துவர் அணி,விவசாய அணி, கலை இலக்கியம் பண்பாட்டு அணி, தொண்டர்கள் அணி, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க அணி ஆகியவை உள்ளன.

இதுவரை இருக்கும் கட்சிகளில் திருநங்கைகள் அணி, மாற்றுத்திறனாளிகள் அணி, குழந்தைகள் அணி ஆகியவை இல்லாதது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அணிகளுக்கு மாநில அளவிலான நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், அமைப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை நியமனம் செய்ய விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.
இதன் மூலம் மாவட்ட செயலாளர்கள் தவிர்த்து சார்பு அணி நிர்வாகிகள் நியமனம் மூலம் கூடுதல் இளைஞர்களுக்கு பொறுப்பு தர முடியும் என்பது விஜயின் கணக்கு. ஆனால், இதுவரை எந்த கட்சியிலும் இல்லாத வகையில் குழந்தைகள் அணியை உருவாக்க தவெக திட்டமிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications