Vijay- Sangeetha Divorce: 27 ஆண்டுகால திருமண உறவில் விரிசல்! விஜய்யிடம் விவாகரத்து கேட்டு சங்கீதா மனு
சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு, ஒரு நடிகையுடன் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டி மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கு வரும் மார்ச் 20ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது விஜய்யும் சங்கீதாவும் ஆஜராவார்கள் என தெரிகிறது. சங்கீதா 12 பக்க மனுவை தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து சங்கீதா தனது மனுவில் கூறியிருப்பதாவது: எங்களது திருமண வாழ்க்கை தொடக்க காலத்தில் மகிழ்ச்சியாகவே கடந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனது கணவர் விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பது எனக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தேன்.
பின்னர் கடந்த 2021 செப்டம்பர் டூ 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி கால கட்டத்தில் வழக்கறிஞர் மூலம் விஜய்யிடம் பேசினேன். அப்போது அந்த நடிகையுடனான தொடர்பை துண்டிப்பதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் அவர் என்னை ஒதுக்கி வைத்துவிட்டு நடிகையுடன் தொடர்பை தொடர்ந்தார். இது எனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியது. திருமணத்துக்கு மீறிய இந்த உறவை நான் தட்டிக் கேட்டதால் பொருளாதார ரீதியாக எனக்கு நிறைய கட்டுப்பாடுகளை விஜய் விதித்தார்.
குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும், அவர்களின் மனமும் பாதிக்கப்படும் என்பதால் விவாகரத்து கோருவதை தள்ளி வைத்தேன். அந்த நடிகையுடன் பல்வேறு பொது இடங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விஜய் சென்று வருகிறார். அந்த நடிகையுடன் என் கணவருடன் எடுத்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பரப்பி வருகிறார்.
அந்த புகைப்படங்களுக்கு விஜய் எப்போதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. இதனால் எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்துக்கான நோட்டீஸ் அனுப்பியும் இரு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் விஜய் ஒத்துழைக்கவில்லை.
கவுரவமாக நவம்பர் 9ஆம் தேதி விஜய்யுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக பிரிய விரும்பினேன். ஆனால் அதற்கும் அவர் ஒத்துழைக்கவில்லை. இதனால் நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தேன்.
அந்த நடிகையின் பெயரை தற்போது குறிப்பிடுவதை தவிர்க்கிறேன். கணவன்- மனைவி உறவில் விஜய் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். சென்சிட்டிவான இந்த வழக்கை தனி அறையில் விசாரக்க வேண்டும். 2021 ஆம் ஆண்டு முதல் என்னை வார்த்தையால் விஜய் நிறைய முறை அவமானப்படுத்தியுள்ளார்.
நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் எனது கணவருக்கும் நடிகைக்குமான ஆதாரங்களை வெளியிடுவேன். இவ்வாறு சங்கீதா தனது மனுவில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் இடையே 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். திருமணமாகி 27 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதலே விஜய்யை சங்கீதா பிரிந்து வாழ்ந்து வருகிறார்.












Click it and Unblock the Notifications