லோக்சபா தேர்தலில் பிரச்சனை வரும்.. சீனியர்களை விஜய் எப்படி சமாளிப்பாரா? தராசு ஷ்யாம் சொன்ன விஷயம்!
சென்னை: தவெக தலைமையிலான புதிய கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தவெக தலைமையிலான இந்த கூட்டணியில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் , மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கட்சியின் 5 தலைவர்களும் இணைந்து வெற்றிக்குறி காட்டுவது போல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தலுக்காக மட்டுமல்லாமல் கொள்கை கூட்டணி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், தமிழ்நாட்டில் 1962 முதல் கூட்டணி அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது விஜய் ஒருங்கிணைப்பில் ஒரு புதிய கூட்டணி அமைந்துள்ளது. திமுக கூட்டணியில் இருந்த அத்தனை கட்சிகளும் தவெக கூட்டணியில் இருக்கிறது.

வெற்றி என்ற பெயர் சூட்டப்படுவதால் வெற்றி கூட்டணியாகிவிடாது. அதற்கு நிறைய உழைக்க வேண்டும். இதனை முதல்வர் விஜய் செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருக்கலாமே? அவர் தலைமையில் தான் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களை சந்திப்பதற்கு ஏன் தயங்குகிறார் என்று தெரியவில்லை. வழக்கமாக கூட்டணிக்கு தலைமை தாங்குபவர் தான் பெயரை அறிவிப்பார்.
ஆனால் விஜய் அது தேவையில்லை.. செய்தியாளர்களை சந்திக்க அவசியமில்லை என்று நினைக்கிறார். இந்த கூட்டணிக்குள் சிபிஐ, சிபிஎம் ஆகிய இரு கட்சிகளும் வரவில்லை. தேசிய கட்சிகளான இரண்டும் கூட்டணிக்கு வர தயங்குகின்றனர். ஆட்சிக்கு ஆதரவு அளித்துள்ளார்கள். ஆளுநர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்றும் கருதுகிறார்கள். கூட்டணிக்குள் முரண்கள் இருக்கின்றன.
ஆனால் உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் என்று வரும் போது கூட்டணியின் வெற்றிக்காக உழைப்பார்கள் என்றே பார்க்கிறேன். தொகுதி பங்கீடு வரும் போது தான் கூட்டணிக்குள் பிரச்சனை வரும். உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தலில் பிரச்சனைகள் பெரிதாக வராது. லோக்சபா மற்றும் சட்டசபைத் தேர்தலில் சீட் பெறுவதில் பிரச்சனைகள் வரும்.
திமுக கூட்டணியில் இருந்த போது, இதே கட்சிகள் என்னென்ன பிரச்சனைகள் கொடுத்தன என்பதை பார்த்தோம். அதனால் இந்த கூட்டணியை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும். சீனியர் தலைவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளதால், விஜய் கொஞ்சம் திணறுவார். தவெக விஜய்யை தான் முன்னிறுத்துகிறது. கூட்டணி கட்சித் தலைவர்களை அவரால் முறையாக சந்திக்க முடியுமா என்பதே கேள்வி தான்.
தேசிய அரசியலுக்கு தவெக சென்றால், பல்வேறு நிலைப்பாடுகளை எடுக்க வேண்டிய சூழல் வரும். அதேபோல் கூட்டணி என்று வரும் போது தவெக எப்படி சமாளிக்கும் என்பது தெரியவில்லை. ராகுல் காந்தியை பிரதமராக விஜய் முன்னிறுத்துவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
