நீங்கள் நினைக்காத கூட்டணி.. விஜய் பக்கம் சாயும் டிடிவி தினகரன்.. பின்னணியில் நடப்பது என்ன?
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தவெக - அமமுக கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக பேச்சுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் தவெக தரப்பில் இதுவரை எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றும், விஜய்யின் சுற்றுப்பயணம் முடிவடைந்த பின்னரே கூட்டணி குறித்த பேச்சுகள் தொடங்கும் என்று அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி இருக்கிறார். 2026ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலை இலக்காக வைத்து தவெக தீவிரமாக பணியாற்றி வருகிறது. கடந்த மாதம் மதுரையில் தவெகவின் 2வது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட நிலையில், அடுத்ததாக செப்டம்பர் 13ஆம் தேதி விஜய் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறார். வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் சுற்றுப்பயணத்தில் ஈடுபடுகிறார்.

முதற்கட்டமாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதனிடையே தமிழக அரசியலில் மிகப்பெரிய சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கொதித்து எழுந்துள்ளார். அதிமுக ஒன்றியணைய வேண்டும் என்ற அவரின் பேச்சால், எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் என்டிஏ கூட்டணியில் இருந்து அமமுக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் டிடிவி தினகரன், விஜய் மக்கள் விரும்பும் நடிகராக இருக்கிறார். எத்தனையோ பேர் பயப்படுகின்ற சூழலில், விஜய் துணிச்சலாக கட்சியை தொடங்கி இருக்கிறார். அதனைப் பார்த்து பொறாமைப்பட வேண்டிய அவசியம் என்ன?
நீங்கள் நினைக்காத கூட்டணி எல்லாம் அமைய வாய்ப்பு இருக்கிறது என்று சூசகமாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே விஜய் நேரடியாகவே அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆகிய இருவரையும் கொண்டாடி வருகிறார். இதனால் அதிமுகவினர் விஜய் மீது ஒருவகையான பாசத்துடன் இருந்து வருகிறார்கள். தற்போது டிடிவி தினகரன் நேரடியாகவே விஜய்யின் துணிச்சலை பாராட்டி இருக்கிறார்.
இதனால் விஜய் தலைமையின் கீழ் அமமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக சில பேச்சுகள் எழுந்துள்ளன. டிடிவி தினகரன் மிகப்பெரிய சீனியராக இருந்தாலும், தமிழ்நாடு முழுவதும் அவருக்கு சரியாக கட்டமைப்பு இல்லை. ஆனால் தவெக தொடங்கிய ஓராண்டிலேயே தமிழ்நாடு முழுவதும் கட்டமைப்பை ஏற்படுத்தி இருப்பதோடு, கரிஸ்மாடிக் தலைவராக விஜய் வளர்ந்து வருகிறார்.
இதனால் விஜய் தலைமையில் கீழ் டிடிவி தினகரன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இதனிடையே தவெக - அமமுக கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதா என்ற விசாரித்த போது, விஜய்யின் சுற்றுப்பயணம் முடிவடைந்த பின்னரே அது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று தவெக வட்டாரங்கள் கூறுகின்றன. இதுவரை எந்தக் கட்சியும் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
தவெகவின் அரசியல் ஆலோசகராக இருந்து வரும் ஜான் ஆரோக்கியசாமி தொடர்ச்சியாக கருத்துக்கணிப்புகளை எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதேபோல் விஜய் போட்டியிடும் தொகுதியில் கட்டமைப்பை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபடுகிறார். இதனால் விஜய் சுற்றுப்பயணத்திற்கு பின்னரே, அவர் சில அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்குவார் என்று அக்கட்சியினர் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications