பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு?
சென்னை: பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று தவெக மாவட்டச் செயலாளர்கள் எழுத்துப்பூர்வமாக கையெழுத்து போட்டு கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கூகுள் ஃபார்ம் மூலமாக இதனை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், வியூக அமைப்பாளர் விஷ்ணு ரெட்டி ஆகியோர் இதனை பெற்றுள்ளனர். இதனால் விஜய் நாளை டெல்லி செல்லும் போது பாஜக தலைவர்களுடன் பேசலாம் என்று பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிப்பு இன்னும் சில நாட்களுக்கு தள்ளி போகலாம் என்று கணிக்கப்படுகிறது. இதனிடையே நாளை விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கரூர் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக இருக்கிறார். இப்படியான சூழலில் நேற்று திடீரென தவெகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அவசர அவசரமாக கூட்டப்பட்டுள்ளது.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் செலவுகள் தொடர்பாக முதலில் பேசப்பட்டிருக்கிறது. ஒரு தொகுதிக்கு சுமார் ரூ.5 கோடி வரை செலவு செய்ய வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் அரண்டுபோன மாவட்டச் செயலாளர்கள், ரூ.5 கோடி செலவு செய்யும் வேட்பாளர்கள் கட்சியில் இல்லை என்று வெளிப்படையாக கூறி இருக்கின்றனர்.
இதன்பின் பாஜக உடன் கூட்டணிக்கு செல்லலாமா என்று புஸ்ஸி ஆனந்த் கேட்டுள்ளார். அதற்கு மரியாதையான தொகுதி எண்ணிக்கை மற்றும் விஜய்க்கு துணை முதல்வர் பதவி என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தங்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்றாலும், 50 சீட்களையாவது பெற வேண்டும் என்று பலரும் அறிவுறுத்தி இருக்கின்றனர்.
அதேபோல் சிறுபான்மை மாவட்டச் செயலாளர்களும் கூட பாஜக உடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறி இருக்கின்றனர். இந்த மீட்டிங்கில் புஸ்ஸி ஆனந்த் மட்டுமல்லாமல் தேர்தல் வியூக அமைப்பாளர் விஷ்ணு ரெட்டி ஆகியோரும் பங்கேற்று இருக்கின்றனர். மாவட்டச் செயலாளர்களில் பெரும்பாலானோர் பாஜக கூட்டணிக்கு செல்லலாம் என்று கூறிய பின், எழுத்துப்பூர்வமாகவும் கையெழுத்து பெற்றுள்ளனர்.
கூகுள் ஃபார்ம் மூலமாக மாவட்டச் செயலாளர்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. இது வெறும் தேர்தல் கூட்டணி மட்டும்தான் என்று பிரச்சாரம் செய்யலாம் என்றும் ஆலோசனை நடந்திருக்கிறது. இதனால் இன்று மாலை விஜய் டெல்லி புறப்பட இருக்கும் சூழலில், பாஜக தலைவர்களை தவெகவினர் சந்திக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications