மீனவர்களின் தோழன் விஜய்.. பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம்.. பின்வாங்கும் தவெக? அரங்கேறும் திட்டம்!
சென்னை: பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவில் இருந்து தவெக அரசு பின் வாங்கும் முடிவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கவில்லை என்றாலும், மீனவர்களின் குரலை கேட்டு முடிவு எடுத்ததாக கூறி, மீனவர்களின் நண்பன் விஜய் என்று பிராண்ட் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கரில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கான கட்டுமான பணிகள் மற்றும் அதன் டிசைன் உள்ளிட்டவற்றை திட்டமிட பிரத்யேகமாக 3 குழுக்கள் அமைக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் ரூ.1,200 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தலைமைச் செயலகம் அமைவது கடுமையான விமர்சனங்களை பெற்றது. விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட், விஜய்யின் ஜாதகப்படி கடற்கரைக்கு அருகில் தலைமைச் செயலகம் அமைந்தால், அது விஜய்க்கு சாதகமாக இருக்கும் என்று கணித்துள்ளார்.
இதனால் தலைமைச் செயலகத்திற்கான இடம் கடற்கரைக்கு அருகில் தேர்வானது. ஆனால் 9 மீனவ கிராமங்கள் பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக பட்டினப்பாக்கம் இருப்பதால், தவெக அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன.
திமுகவை தவிர்த்து அதிமுக, பாமக, நாதக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் நேரடியாகவே சாடின. இந்த நிலையில் மீனவ கிராமங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தவெக அரசு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மீனவ பிரதிநிதிகளை விஜய் சந்திக்க திட்டமிட்டிருக்கிறார். இதன்பின் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் முடிவில் இருந்து விஜய் பின்வாங்கும் முடிவை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
இந்த அறிவிப்புக்கு பின் மீனவர்களின் குரலுக்கு செவி சாய்த்த விஜய், மீனவர்களின் நண்பன் விஜய் என்று பிராண்ட் செய்ய தவெக திட்டமிட்டுள்ளது. ஆனால் இல்லாத ஒரு பிரச்சனையை கிளப்பிவிட்டு, எதிர்ப்பு வந்த பின் அதனை ரத்து செய்துவிட்டு, அதன் மூலமாக அரசியலில் மைலேஜ் தேடும் வகையில் தவெக திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications
