ஸ்டாலின் தலைமைக்கு முதல் தோல்வி.. எடப்பாடி பழனிசாமிக்கு 11வது தோல்வி.. விஜய்யால் நடந்த சம்பவம்!
சென்னை: திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று கொண்ட பின், அந்தக் கட்சி அடைந்த முதல் தோல்வியாக 2026 சட்டசபைத் தேர்தல் அமைந்துள்ளது. அதேபோல் அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு வந்த பின், எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ள 11வது தோல்வியாக இது அமைந்திருக்கிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 1 மணி நிலவரப்படி தவெக 107 தொகுதிகளிலும், அதிமுக 64 தொகுதிகளிலும், திமுக 63 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. தபால் வாக்குகள் தொடங்கி தவெக மிகப்பெரிய அளவில் முன்னிலையை தக்க வைத்து கொண்டுள்ளது. இது திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த டிரெண்ட் தொடரும் பட்சத்தில் தவெக தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும் கூட, கூட்டணி ஆட்சியை அமைக்க முடியும் என்று தெரிகிறது. ஆனால் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளால் மெஜாரிட்டி பெற முடியாது. இதனால் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள், அந்த கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் இணையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு பின் திமுக தலைவர் பொறுப்புக்கு ஸ்டாலின் வந்தார். திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், எந்த தேர்தலிலும் திமுக தோல்வி அடைந்ததே இல்லை. கிட்டத்தட்ட 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபைத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல், ஈரோடு இடைத்தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தல், 2024 லோக்சபா தேர்தல் என்று தொடர்ச்சியாக திமுக வெற்றிபெற்றது.
இதனால் திமுக தலைமை பொறுப்புக்கு ஸ்டாலின் வந்த பின், திமுக அடையும் முதல் தோல்வி இதுவாகும். அதேபோல் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை பொறுப்புக்கு வந்த பின், அந்தக் கட்சி சந்தித்த எந்தத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு இது 11வது தோல்வியாக அமைந்துள்ளது.
மேலும் இந்த சட்டசபைத் தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை எந்தக் கட்சி பெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று கூறி வந்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும், தற்போது எதிர்க்கட்சி போட்டியில் ஓடிக் கொண்டிருக்கின்றனர். இதனால் தமிழ்நாட்டில் இரு பெரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications