ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்!
சென்னை: பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் ஒரு தொகுதிக்கு ஒருவர் என்று பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை செய்யும் நிர்வாகிகளை மட்டும் விஜய் நேர்காணல் செய்து வருவது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே முதற்கட்டமாக 60 பேரிடம் விஜய் நேர்காணல் நடத்திய சூழலில், இன்று 50 பேரிடம் நேர்காணல் செய்திருக்கிறார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், அத்தனை கட்சிகளும் வேட்பாளர்கள் தேர்வில் தீவிரமாக இருக்கின்றன. அந்த வகையில் தவெக தரப்பிலும் அக்கட்சியின் தலைவர் விஜய் வேட்பாளர்களுக்கான நேர்காணலை நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பாக 60 பேரிடம் விஜய் நேர்காணல் நடத்தி இருந்தார். இதன்பின் புதுச்சேரி தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை நேர்காணல் செய்தார்.

தொடர்ந்து 2வது கட்டமாக இன்று விஜய் வேட்பாளர்களுக்கான நேர்காணலில் ஈடுபட்டு வருகிறார். பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர்களுக்கான நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நேர்காணலில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகள் பனையூர் அலுவலகம் வந்துள்ளனர்.
மொத்தமாக 50 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த சூழலில், அவர்களை மட்டும் விஜய் நேர்காணல் செய்து வருகிறார். இந்த நேர்காணலில் பங்கேற்க தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் பரிந்துரை கட்டாயம் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலமாக புஸ்ஸி ஆனந்த் ஏற்கனவே தேர்வு செய்த வேட்பாளர்களை மட்டுமே விஜய் நேர்காணல் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
ஏற்கனவே தவெக சார்பாக தொகுதிக்கு ரூ.2 கோடி செலவு செய்வோரை மட்டுமே வேட்பாளர்கள் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள் என்று அக்கட்சியினர் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேபோல் தவெகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலைல் விஜய் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப் போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
நாளை புதுச்சேரிக்கான வேட்பாளர்கள் பட்டியலை விஜய் வெளியிட உள்ளதாகவும், அதன்பின் தமிழக தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்களை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் விஜய்யின் பிரச்சார பயணத்திற்கான திட்டத்தையும் தவெக விரைவில் வெளியிட உள்ளதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications