என்மேல 50 கேஸ் இருக்கு.. விஜய் மீது இல்லையே.. மாநாட்டுக்கு அனுமதி தந்ததே தவறு! தனியரசு காட்டம்
சென்னை: கோடம்பாக்கத்தில் கடந்த 50 ஆண்டுகளாக சொகுசு வாழ்க்கை நடத்திய விஜய், நேராக கோட்டைக்குப் போய் கொடியேற்ற வேண்டும் என்று நினைக்கிறார் என தனியரசு குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்தில் முறையாகப் பதிவு செய்ததையே அந்தக் கட்சியின் தொண்டர்கள் பெரிய சாதனையாகக் கொண்டாடி வருகின்றனர். ஒரு கட்சியைப் பதிவு செய்வது என்பது சாதாரண நடவடிக்கைதான். ஆனால், அதை முறையான அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப் போவது மக்கள்தான். அதற்கு தேர்தலில் போட்டியிட்டுக் குறிப்பிட்ட சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். அப்படி ஒரு தேர்தல் மட்டும் பெற்றால் போதாது. தொடர்ந்து அதைத் தக்க வைக்கவேண்டும்.

1949இல் தொடங்கப்பட்ட திமுக தேர்தல் பாதைக்கு வந்தது முதல் இதுவரை அந்தக் கட்சியின் அங்கீகாரத்தைத் தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. மிகப்பெரிய அரசியல் சக்தியாக இருந்த எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலத்திலேயே அக்கட்சி தனது அரசியல் அங்கீகாரத்தை இழந்தது இல்லை. அப்படி இருக்கும்போது வெறுமனே பதிவு எண் பெற்றதற்காக இவ்வளவு கொண்டாட்டங்கள் தேவையா என்று குரல் எழுப்பி இருக்கிறார் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தனியரசு.
அவர் ஒரு தனியார் தொலைக்காட்சி அளித்துள்ள பேட்டியில் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து விளாசித் தள்ளியுள்ளார். அவர் பேசுகையில், "திமுக அதிமுக என்ற ஒரு களம் தமிழ்நாட்டில் இருக்கிறது. அது விஜய் வருகையால் மாறிவிடும் என சில ஊடகங்களில் விவாதம் நடக்கிறது. என்னைப் பொறுத்தவரை அப்படியான ஒரு மாற்றம் வரக்கூடாது என்றே நினைக்கிறேன்.
ஏனென்றால், விஜய் எதை நோக்கிப் பயணிக்கப்போகிறார் என்பது இன்னும் தெளிவாகவில்லை. அவர் தனது அறிக்கையில், 'திசைகளை நோக்கிப் பயணிப்பதற்கான முன் அறிவிப்பாகவே கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் பதிவு கிடைத்துள்ளது' என்று சொல்லி இருக்கிறார். தேர்தல் ஆணையத்தில் ஒரு கட்சியைப் பதிவு செய்வதையே பெரிய வியப்பாக அவர் பேசுகிறார்.
ஒரு கட்சியை தொடங்க வேண்டும் என யார் வேண்டி விண்ணப்பம் செய்தாலும் அதைத் தேர்தல் ஆணையம் பதிவு செய்யும். அதில் ஒரு ஆச்சரியமும் கிடையாது. இவ்வளவு காலம் திரைத்துறையில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்த விஜய்க்கு இதுவே சாதனையாகத் தெரிகிறது. கடந்த பிப்ரவரி மாதம் கட்சிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து, 7 மாதங்கள் காத்திருந்த பிறகுதான் பதிவு எண்ணையே பெற்றுள்ளார் விஜய். அதை உடனே ஊடகங்கள் பெரிய செய்தியாக வெளியிடுகின்றன.
இன்னும் மாநாடு நடத்தவே இல்லை, அதற்கு அதைப் பெரிய சர்ச்சையாக மாற்றுகிறார்கள். 50 பேர்தான் வருவார்கள் என தவெக தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், குறைந்தது 1 லட்சம் பேருக்கு மேல் கூடுவார்கள் என்கிறார்கள். அதைவிட அதிகமாக வந்தாலும் வரலாம். ஒரு தவறான கணக்கை காவல்துறை விளக்கத்தில் அளித்துவிட்டு, அதிக ஆட்களைக் கூட்டுவது எப்படி சரி? பாதுகாப்பு வசதிகளை அதற்கு ஏற்ப செய்யத்தானே காவல்துறை விளக்கம் கேட்கிறது. இன்னும் சொல்லப் போனால் காவல்துறை விஜய் மாநாட்டுக்கு அனுமதியே அளித்திருக்கக் கூடாது.
நாங்கள் இத்தனை ஆண்டுகளாகக் கட்சி நடத்துகிறோம். நாங்கள் ஒரு மாநாடு நடத்த அனுமதி கேட்டால் காவல்துறை தராது. ஒரு பெரிய நடிகர் என்பதால் உடனே அனுமதிக் கொடுக்கிறார்கள். நாங்கள் மாநாடு நடக்கப்போகும் தேதிக்கு 2 நாட்கள் முன்பு வரை காத்திருந்து பார்த்துவிட்டு, கடைசியில் நீதிமன்றம் போய் அனுமதி வாங்கினோம். நான் ஒரு சட்டமன்ற உறுப்பினராக ஆவதற்கே 6 மாதம் தலைமறைவாக இருந்து, பல நாட்கள் சிறைவாசம் இருந்து, கிட்டத்தட்ட 50 வழக்குகளைப் பெற்று வந்துள்ளேன். எங்கள் கட்சியினர் 500 பேர் சிறைப்பட்டுள்ளார்கள். எத்தனை வாகனங்களை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது தெரியுமா?
நாங்கள் எளிதாக அரசியல் களத்திற்கு வந்துவிடவில்லை. நடிகர் விஜய் கோடம்பாக்கத்திலிருந்து அப்படியே விலையுயர்ந்த காரில் பயணித்து கோட்டைக்குப் போகவேண்டும் என்று நினைக்கிறார். இவர் ஏழை மக்களின் கஷ்டங்களை அறிந்தவரா? பள்ளி மாணவர்கள் விழாவில் கலந்து கொள்ள வந்தவர் கூடவே பவுன்சர்களை கூட்டி வருகிறார். அந்த மாணவர்களைச் சந்திக்க எதற்கு பவுன்சர்கள்? இவர் எப்படி நாளை கிராமத்திற்குப் போய் மக்களைச் சந்திக்கப் போகிறார்.
இவர் கட்சி ஆரம்பித்தது முதல் ஒருமுறையாவது ஊடகத்தை அவர் சந்தித்திருக்கிறாரா? அரசியல் பிரவேசம் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்விக்குப் பதிலளித்து இருக்கிறாரா? அவரது கொள்கை என்ன என்று ஊடகத்தினரிடம் சொல்லி விவாதித்தாரா? ஊடகத்தினரின் ஒரு கேள்விக்காவது பதில் கொடுத்திருக்கிறாரா? ஆனால், அதற்கு அவர் அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்றாக வருவாரா எனப் பேசி விவாதிக்கிறார்கள்? இது என்ன நியாயம்?

திமுக மற்றும் அதிமுக என்பது இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலக் கட்சிகளில் ஒன்று. அந்த இரண்டு கட்சிகளையும் எந்தவித வாக்கு வங்கியையும் நிரூபிக்காத விஜய்யுடன் ஒப்பிட்டுப் பேசுவது எப்படி சரி? அதற்கு 1% கூட தகுதி இல்லாதவர் விஜய். அவர் இதுவரை என்ன செய்திருக்கிறார். நடிப்பதைத் தவிர அவர் மக்களுக்காகச் செய்தது என்ன? போராடியது என்ன? மூன்றாவது முறையாக மதவாத அரசியலை முன் வைத்து ஆட்சிக்கு வந்து மோடி அரசியல் பற்றி விஜய்யின் கருத்து என்ன? எதைப் பற்றியும் விஜய் விளக்கம் அளித்தது இல்லை.
கடந்த 50 ஆண்டுகளாக அவர் தனது சொந்த இலாபம் ஒன்று இலக்காக வைத்துச் செயல்பட்டு வந்துள்ளார். சினிமாவில் தனது வருமானம் ஒன்றே குறி என வாழ்ந்து வந்துள்ளார். இவர் தனது கொள்கைகளை முதலில் சொல்லட்டும். அப்படி ஒன்று இருக்கிறதா? என்றே தெரியவில்லை. தமிழ்நாட்டில் இருக்கின்ற கட்சிகளைத் தாண்டி புதியதாக அவர் என்ன கொள்கையைச் சொல்லிவிடப் போகிறார்? அப்படி அவரால் சொல்லிவிட முடியுமா? எனப் பார்ப்போம்" என்கிறார்.












Click it and Unblock the Notifications