என் மனைவி சங்கீதா.. பேங்க் அக்கவுண்டில் கோடிக்கணக்கில் போட்டு வைத்த விஜய்! தங்கம் மட்டும் இவ்வளவா?
சென்னை: பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் உள்ள சொத்து விவரம் வெளியாகியுள்ளது. பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய், தாக்கல் செய்துள்ள அபிடவிட்டில், விஜயின் மனைவி சங்கீதாவின் பெயரில் இந்தியன் வங்கியில் சுமார் 25 கோடி ரூபாயும் ஆக்ஸிஸ் வங்கி கணக்கில் சுமார் 40 கோடி ரூபாயும் வைப்புத் தொகையாக இருப்பதாகவும் எச்டிஎப்சி வங்கிக் கணக்கில் 20 கோடி ரூபாயும் வைப்புத் தொகையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இந்த நிலையில், பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் விஜய், வியாசர்பாடி தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாவிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அவருக்கு மாற்று வேட்பாளராக வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் சிவா வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கலின்போது கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். மேலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிட உள்ள விஜய், அங்கு ஏப்ரல் 2ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
விஜய் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களும் இடம்பெற்றுள்ளன. அதன்படி, அவரது மனைவி சங்கீதா விஜய் பெயரில் பல்வேறு வங்கிகளில் பெரிய அளவில் வைப்புத் தொகைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியன் வங்கி கணக்கில் சுமார் ரூ.25 கோடி, ஆக்ஸிஸ் வங்கி கணக்கில் சுமார் ரூ.40 கோடி, எச்டிஎப்சி வங்கி கணக்கில் சுமார் ரூ.20 கோடி வைப்புத் தொகையாக இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் தாக்கல் செய்துள்ள விவரப்படி, அவரது மொத்த அசையும் சொத்து மதிப்பு ரூ.404.58 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இந்தியன் வங்கியில் மட்டும் சுமார் ரூ.213.36 கோடி வரை வைப்புத் தொகை இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தனது குடும்பத்தில் தன்னைத் தவிர மற்றவர்கள் தனியாக வருமானம் ஈட்டவில்லை என்றும் அவர் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. விஜய் பெயரில் 883 கிராம் தங்கம் இருப்பதாகவும், அவரது மனைவி சங்கீதா பெயரில் 391 சவரன் தங்க நகைகள் இருப்பதாகவும் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications