"கொங்கு மண்டலத்தில் தவெக 99% வெற்றி பெறும்.. விஜய் தான் நிரந்தர முதலமைச்சர்" - செங்கோட்டையன்
சென்னை: "ஆண்டுக்கு 4 படம் நடித்தால் 1000 கோடி.. அதை தூக்கி எறிந்துவிட்டு விஜய் வந்திருக்கிறார் என்றால் புரிந்து கொள்ளுங்கள். 2026ல் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் விஜய் தான். இந்திய நாட்டிற்கே வழிகாட்டியாக உருவாகுவார். கொங்கு மண்டலத்தில் தவெக 100க்கு 99% வெற்றி பெறும்" எனத் தெரிவித்துள்ளார் செங்கோட்டையன்.
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில், பல்வேறு சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் இணைந்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்த பிறகு, மேலும் சில அதிமுக நிர்வாகிகள் தவெக-வில் இணைவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

அதற்கேற்ப அதிமுக நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான ஜே.சி.டி.பிரபாகர் தவெகவில் நேற்று இணைந்தார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை தவெக கூட்டணியில் இணைக்க செங்கோட்டையன் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ஜேசிடி பிரபாகர் தவெக-வில் இணைந்திருப்பது, ஓபிஎஸ்-இன் வருகையை உறுதிப்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தவெகவில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பலரும் இணைந்து வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு பிறகு தவெக-வில் இன்னும் பல அதிமுக நிர்வாகிகள் இணைவார்கள் என்று செங்கோட்டையன் கூறி இருந்தார். செங்கோட்டையன் தெரிவித்தது போலவே, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், "வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கு கூட்டணி குறித்து யார் வேண்டுமானாலும் கருத்துகளைக் கூறலாம். ஆனால் தவெக தலைவர் விஜய்யுடன் நடைபெறுவது தான் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையாக இருக்கும். தலைவர் விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி வைக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
ஒவ்வொரு இயக்கமும் ஒன்றிணைந்து செயல்படுவது அவரவர் முடிவு. ஆகையால் தவெக-வில் காங்கிரஸ் இணையுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் புரட்சிகரமானதாக இருக்கும். புதிய வரலாற்றைப் படைக்கும் தலைவராக, பொதுமக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் தலைவராக எதிர்காலத்தில் விஜய் திகழ்வார்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "ஆண்டுக்கு 4 படம் நடித்தால் 1000 கோடி.. அதை தூக்கி எறிந்துவிட்டு விஜய் வந்திருக்கிறார் என்றால் புரிந்து கொள்ளுங்கள். 2026ல் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் விஜய் தான். இந்திய நாட்டிற்கே வழிகாட்டியாக உருவாகுவார். கொங்கு மண்டலத்தில் தவெக 100க்கு 99% வெற்றி பெறும்" எனத் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் இன்னும் அதிமுகவை ஒருங்கிணைப்போம் என சொல்லி வருகிறார்கள்.? அது சாத்தியமா? என்ற கேள்விக்கு, "பொறுத்திருந்து பாருங்கள். எப்படி இணையப் போகிறார்கள், யாருடன் இணையப் போகிறார்கள் என்பதற்கு காலம் பதில் சொல்லும் என பதில் அளித்துள்ளார் செங்கோட்டையன்.












Click it and Unblock the Notifications