அரசியல் கட்சியாக முழு வடிவம் பெற்றது தவெக.. கொடி ஏற்றி பாடலை வெளியிட்டார் விஜய்!
சென்னை: சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலைய செயலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் கொடியை ஏற்றி பாடலை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் தவெக முழு அரசியல் கட்சி என்கிற வடிவத்தை பெற்றிருக்கிறது.
கோலிவுட் திரையுலகில் மாஸ் நடிகராக வலம் வந்த விஜய், கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கதைக்களம் கொண்ட படத்தில் நடித்து வந்திருந்தார். அவர் அரசியலில் இறங்கப்போவதாகவும், எனவேதான் இதுபோன்ற கதைகளில் நடிக்கிறார் என்றும் பேச்சுக்கள் எழுந்தன. இதனை உறுதி செய்யும் விதமாக கடந்த பிப்ரவரி மாதம் அவர் 'தமிழக வெற்றிக் கழகம்' எனும் கட்சியை தொடங்கினார். இது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியது.

யாருடைய வாக்குகளை விஜய் குறிவைக்கப்போகிறார் என்கிற கேள்வி எழுந்தது. ஆனால், கட்சி தொடங்கி அவர் பொதுவெளியில் எதுவும் உரையாற்றவில்லை. மட்டுமல்லாது 2026 தேர்தல்தான் இலக்கு என்றும் அறிவித்திருந்தார். இதற்கான பணிகளை தீவிரமாக கையில் எடுத்தார். அதில் முக்கியமானது, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழக்கும் நிகழ்ச்சி. இதில் அவர் பேசிய விஷயங்கள் பெரும் கவனம் பெற்றிருந்தன.
தொடக்கத்தில் பரவலாக பல விஷயங்களை பேசிய விஜய், சமீபத்திய நிகழ்ச்சியில் நீட் குறித்தும், மாநில உரிமைகள் குறித்தும் பேசியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனம் பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்த சூட்டோடு சூடாக கட்சியின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டார். ஆனால், அரசியல் கட்சியெனில், கொடி முக்கியம். எனவே, இதற்கான பணிகளை தீவிரமாக முன்னெடுத்து, இன்று கட்சியின் கொடியையும், பாடலையும் வெளியிட திட்டமிடப்பட்டது.
இது குறித்து விடுக்கப்பட்டிருந்த அறிவிப்பில், "தமிழகத்தின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக் கொடியை கட்சியின் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கட்சி கொடிப் பாடலை வெளியிட்டு, கொடியை வியாழக்கிழமை ஏற்றி வைக்கிறோம். வியாழக்கிழமை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும், தமிழகம் இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை 9.15 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை நிலைய செயலகத்தில், கட்சியின் தலைவர் விஜய் தவெக கொடியை ஏற்றி வைத்து, கட்சியின் பாடல்களையும் வெளியிட்டுள்ளார். நட்சத்திரங்கள் கொண்ட வட்டத்திற்குள் வாகை மலரும், இரு பக்கங்களில் போர் யானை படமும் இடம்பெற்றுள்ளன. கொடி சிவப்பு மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. இந்த கொடிக்கான அர்த்தம் மற்றும் கொள்கைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் விஜய் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications