இன்று தேமுதிகவுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக அமையுமா? நகர்ப்புற தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும்?
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக முந்தைய தேர்தல்களை விட முன்னேற்றத்தை எட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்றில் உள்ள 12,838 வார்டுகளுக்கும் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்டது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்குகிறது. இந்த தேர்தலில் திமுக தனது கூட்டணிகளுடன் களமிறங்கியுள்ளது. அதிமுக, பாஜக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிட்டன.

தேர்தல் முடிவுகள்
இந்த தேர்தல் முடிவுகளில் தேமுதிகவின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரை மட்டுமல்லாமல் நடுநிலையான மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. காரணம் விஜயகாந்த்! கடந்த 2005 ஆம் ஆண்டு பார்த்து பார்த்து தேமுதிக என்ற கட்சி ஆரம்பித்த நிலையில் 232 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது.

2006 சட்டசபை தேர்தல்
அந்த தேர்தலில் ஒரே இடத்தில் வெற்றி பெற்றது. அக்கட்சி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 27.64 லட்சமாகும். அக்கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளில் இருந்தும் பெற்ற வாக்கு எண்ணிக்கை 8.45 % ஆகும். 2009 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் பாமகவுக்கு செல்வாக்கு மிகுந்த தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்றது. அந்த தேர்தலில் க்கட்சி பெற்ற வாக்குகள் 31 லட்சமாகும். வாக்கு சதவீதம் 10.09 சதவீதமாகும்.

2011 சட்டசபை தேர்தல்
இதற்கு அடுத்து 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் மொத்தம் 29 இடங்களில் தேமுதிக வென்றது. இதன் மூலம் திமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளி எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பெற்றது. அந்த தேர்தலில் 7.88 சதவீதம் வாக்குகளை பெற்றது.

2011 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல்
இதையடுத்து 2011 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி உறுப்பினர் பதவிகளில் 8 இடங்களில வென்றது. அது போல் நகராட்சித் தலைவர் பதவியில் 2 இடங்களிலும் நகராட்சி உறுப்பினர் பதவிகளில் 2 இடங்களிலும் பேரூராட்சித் தலைவர் பதவிககு 119 இடங்களிலும், பேரூராடசித் தலைவர் பதவிகளில் 3 இடங்களிலும் பேரூராட்சி உறுப்பினர் பதவிகளில் 395 இடங்களிலும், மாவட்ட ஊராட்சி பதவிகளில் 5 இடங்களிலும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள பதவிகளில் 339 இடங்களிலும் என மொத்தம் 871 உள்ளாட்சி பதவிகளில் வென்றது.

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்
பின்னர் 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றிருந்தது. அந்த கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகளை காட்டிலும் அதிகபட்சமாக 14 இடங்களில் தேமுதிக போட்டியிட்டது. இதனால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் 14 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. எனினும் 5.1 சதவீத வாக்குகளை பெற்றிருநதது.

2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல்
இதற்கு அடுத்து நடந்த 2016 சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் தேமுதிக இணைந்து 104 இடங்களில் போட்டியிட்டது. ஒரு இடத்திலும் வெல்லவில்லை தன் வாக்கு சதவீதம் 2.41 ஆகும். 2011 ஆம் ஆண்டு முதலே தேமுதிகவுக்கு இறங்கு முகம் ஆகிவிட்டது. 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்து இடங்களில் தோல்வி அடைந்து 0.15 சதவீதமாக வாக்கு சதவீதம் குறைந்தது.

27 மாவட்டங்களில் தேர்தல்
2019 ஆம் ஆண்டு 27 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் 3 இடங்களில் வென்றது. அது போல் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் 97 இடங்களிலும் வென்றது. கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் ஒரு இடத்திலும் தேமுதிக வெல்லவில்லை.

2021 சட்டசபை தேர்தல்
இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு அமமுகவுடன் கூட்டணி அமைத்தது. 60 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இக்கட்சி பெற்ற வாக்கு சதவீதம் 0.43 ஆகும். 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருப்பத்தூரில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியில் ஒரே ஒரு இடத்தில் போட்டியிட்டு தேமுதிக வென்றது.

அடுத்தடுத்து தோல்விகள்
அடுத்தடுத்து நிறைய தோல்விகளை சந்தித்து வரும் தேமுதிக இந்த முறை நடந்த நகர்ப்புற தேர்தலில் எத்தனை இடங்களில் வெல்லும் என்பதை அறிய இன்றைய வாக்கு எண்ணிக்கையை கூர்ந்து கவனித்து வருகிறார்கள். விஜயகாந்தின் நேரடி செயல்பாடுகள் இல்லாததால் கட்சி வரவர தேய்ந்து கொண்டே வருவதாக தொண்டர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். இந்த தேர்தலிலாவது தேமுதிக தலைநிமிருமா? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.












Click it and Unblock the Notifications