விஜயகாந்த் ஹாஸ்டலில் தங்கி படித்தபோது எக்ஸ்ட்ரா சப்பாத்தி கரெக்ட் செய்தது எப்படி? ஃப்ளாஷ்பேக்!
சென்னை: நடிகர் விஜயகாந்த், பள்ளி விடுதியில் தங்கிப் படிக்கும்போது ஹாஸ்டலில் வார்டனை கரெக்ட் செய்துகொண்டு எக்ஸ்ட்ரா சப்பாத்தி வாங்கியதாக முன்பு கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளாக ஓய்வில் இருந்து வந்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார். அண்மை காலமாக வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டதால் கடந்த மாதம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி வீடு திரும்பினார். தொடர்ந்து, தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார். இந்நிலையில் மீண்டும் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சுவாசிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை காலமாகியுள்ளார் விஜயகாந்த்.
தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்த விஜயகாந்த், அதன் பிறகு அரசியலில் காலூன்றி, அதிலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் எட்டிப் பிடித்தார். 2006 முதல் 2016ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 2011ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார் விஜயகாந்த்.
விஜயகாந்த்தின் மறைவு, அவரது ரசிகர்களையும், தொண்டர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்த்தின் ஈகைக் குணம் அனைவரும் அறிந்ததே. விஜயகாந்த் வீட்டுக்குச் சென்ற எவரும், பசியுடன் திரும்பி வந்ததாக வரலாறு இல்லை. யார் தன்னைச் சந்திக்க வந்தாலும், அவர்களை சாப்பிட்டீர்களா எனக் கேட்டு, இல்லை என்றால் சாப்பாடு போட்ட பிறகே பேசுவார்.
விஜயகாந்த் பள்ளிக்கூடம்: விஜயகாந்த், மதுரையிலும், நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்திலும், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையிலும் என பல பள்ளிகளில் படித்துள்ளார். தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது, அங்கு ஹாஸ்டலில் தங்கி இருந்தார் விஜயகாந்த். ஹாஸ்டலில் இருக்கும்போது, வாரத்தில் ஓரிரு முறை சப்பாத்தி வழங்கப்படுமாம். ஆனால், அது விஜயகாந்த் வயிற்றுக்குப் போதாது என்பதால் காசு கொடுத்து வார்டனைக் கரெக்ட் செய்து வைத்துக் கொள்வாராம்.
எக்ஸ்ட்ரா சப்பாத்தி: சாப்பாடு போடும்போது எல்லோருக்கும் போலவே தனக்கும் கொடுக்கப்படும் சப்பாத்திகளைக் சாப்பிட்டுவிட்டு, கை கழுவும் இடத்திற்குப் பக்கத்தில் நின்றால், சமையல்காரர் எக்ஸ்ட்ரா சப்பாத்தியைத் தூக்கிப் போடுவாராம். அவற்றை தனது நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடுவாராம் விஜயகாந்த். இந்த தகவலை விஜயகாந்த்தே, தே பிரித்தோ பள்ளியின் வைர விழா மலரில் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த், தான் படித்த பள்ளிகளுக்கு ஏராளமான உதவிகளை பின்னாட்களில் செய்துள்ளார். உடல் நலத்தோடு இருந்த நாட்களில், தனக்கு சிறுவயதில் பாடம் கற்பித்த ஆசிரியர்களின் பெயர்களை அடிக்கடி குறிப்பிட்டு பேசுவார் விஜயகாந்த். நடிகர், அரசியல் தலைவர் என்ற உயரங்களை எட்டிய பிறகும் அவர்களை சந்தித்து பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications