தேமுதிக இளைஞரணிச் செயலாளர் ஆகிறார் விஜய பிரபாகரன்! ஆவணி மாதம் பொதுக்குழுவை கூட்டி முக்கிய முடிவுகள்!
சென்னை: தேமுதிக இளைஞரணிச் செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் புரோமோஷன் செய்யப்படவுள்ளார்.
தற்போது உட்கட்சி தேர்தல் நடைபெறும் நிலையில், ஆவணி மாதம் பொதுக்குழுவை கூட்டி இன்னும் பல முக்கிய முடிவுகளை எடுக்கும் திட்டத்தில் இருக்கிறாராம் பிரேமலதா விஜயகாந்த்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் இப்போதே கட்சியின் அமைப்புகளை வலிமைப்படுத்தும் பணிகளை கவனிக்கத் தொடங்கிவிட்டார் பிரேமலதா.

கேப்டன் உடல்நிலை
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் அவரது இடத்தில் நின்று கட்சிப்பணிகளை கடுமையாக இழுத்துப் போட்டு செய்து வருகிறார் பிரேமலதா விஜயகாந்த். இதனால் பணிச்சுமைகள் அவருக்கு கூடிக்கொண்டே செல்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகள் கூட நாடாளுமன்றத் தேர்தலுக்கு முழுமையாக இல்லாததால் இப்போதே கட்சியின் அமைப்புகளை பலப்படுத்தும் பணியை தொடங்கியிருக்கிறார்.

விஜய பிரபாகரன்
அந்த வகையில் தேமுதிக இளைஞரணிக்கு விஜய பிரபாகரனை செயலாளராக நியமித்து தமிழகம் முழுவதும் அவரை ஒரு ரவுண்டு அடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம் பிரேமலதா. இதேபோல் பொதுக்குழு மூலம் பிரேமலதா விஜயகாந்துக்கு செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டால் அவர் வகித்து வரும் பொருளாளர் பதவி எல்.கே.சுதீஷ் வசம் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.

தேமுதிக பொதுக்குழு
கடந்த 10-ஆம் தேதி தொடங்கிய தேமுதிக உட்கட்சித் தேர்தல் வரும் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் முடிவடைந்த பின்னர் வரும் ஆவணி மாதத்தில் தேமுதிக பொதுக்குழு சென்னையில் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் மேற்கூறிய சில மாற்றங்களும், முக்கிய முடிவுகளும் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி குறைவு
திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் உட்கட்சித் தேர்தலை ஒப்பிடும் போது தேமுதிகவில் பெரியளவில் எந்தப் பதவிக்கும் போட்டியில்லை. ஒரு கட்சிப் பதவிக்கு 5 முதல் 10 பேர் வரை திமுகவில் போட்டிபோடும் சூழலில், தேமுதிகவில் ஒருவர் நிற்பதே பெரிய விவகாரமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications