DMDK: யாருக்கும் இல்லாத சலுகை! தேமுதிகவுக்கு "10+1"! ஸ்டாலின் நம்பிக்கையை காப்பாற்றுவாரா பிரேமலதா?
சென்னை: 2005 ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் கட்சி தொடங்கியதுமே, தேமுதிகவின் கோட்டை என அழைக்கப்பட்ட விருத்தாசலம் தொகுதியின் களநிலவரம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். திமுக கூட்டணியில் முதல் முறையாக தேமுதிக இணைந்த நிலையில் பிரேமலதா சட்டசபை உறுப்பினராவாரா? என்பதையும் பார்க்கலாம்.
விருத்தாசலம் சட்டசபை தொகுதியின் முதல் தேர்தல் 1952-ல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் கதிரவேலு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து 1957-ல் நடந்த தேர்தலில் எம். செல்வராஜ் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1962 மற்றும் 1967 ஆகிய ஆண்டுகளில் நடந்த அடுத்தடுத்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் ஜி. பூவராகவன் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியாக இருந்தார். பின்னர் 1971-ல் திமுக முதன்முதலாக இத்தொகுதியைக் கைப்பற்றியது, அக்கட்சியின் சார்பில் எம். செல்வராஜ் வெற்றி பெற்றார்.
அதிமுக உதயமான பிறகு 1977-ல் நடந்த தேர்தலில் அக்கட்சியைச் சேர்ந்த சி. இராமசாமி வெற்றி வாகை சூடினார். அதன் பிறகு 1980 மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் ஆர். தியாகராஜன் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றார்.
1989-ல் அதிமுகவின் ஜி. புவனேஸ்வரி வெற்றி பெற்ற நிலையில், 1991-ல் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் ஆர். தியாகராஜன் மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996-ல் திமுகவின் குழந்தை தமிழரசன் வெற்றி பெற்றார். 2001-ல் பாமக இந்தத் தொகுதியைக் கைப்பற்றியது, அக்கட்சியின் சார்பில் ஆர். கோவிந்தசாமி வெற்றி பெற்றார்.
இத்தொகுதியின் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பம் 2006-ல் ஏற்பட்டது. தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த், தனது கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே தொகுதி இதுவாகும். அவரைத் தொடர்ந்து 2011-லும் தேமுதிகவைச் சேர்ந்த வி. முத்துக் குமார் வெற்றி பெற்று தேமுதிகவின் கோட்டையாக மாற்றினார்.
2016-ல் நடந்த தேர்தலில் அதிமுகவின் வி. கலைச்செல்வன் வெற்றி பெற்றார். இறுதியாக, 2021 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆர். இராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று, தற்போது இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். இந்த தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிட்டது. அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த் தோல்வியடைந்தார். முதல் இரு இடங்களை பெற்ற வாக்காளர்களில் 50 சதவீதம் வாக்குகளை கூட அவர் பெறவில்லை.
இந்தத் தொகுதியின் வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல் 2006 ஆகும். நடிகர் விஜயகாந்த் தனது தேமுதிக கட்சியைத் தொடங்கி, முதல்முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி இதுதான். அந்தத் தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்ற ஒரே ஒரு தொகுதியும் இதுவே.
தொடக்க காலங்களில் காங்கிரஸ் கட்சி இங்கு பலமுறை வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக ஆர். தியாகராஜன் மூன்று முறை (1980, 1984, 1991) வெற்றி பெற்றுள்ளார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு, 2021 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆர். இராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று, இத்தொகுதியை மீண்டும் காங்கிரஸின் வசமாக்கினார்.
விருத்தாசலம் தொகுதி வன்னியர் சமூகத்தினர் மற்றும் ஆதிதிராவிடர் சமூகத்தினர் சரி விகிதத்தில் வாழும் ஒரு பகுதியாகும். எனவே, இங்கு பாமக, திமுக, அதிமுக ஆகிய மூன்று கட்சிகளுமே பலமாக உள்ளன. விவசாயம் மற்றும் பீங்கான் தொழிற்சாலைகள் இந்தத் தொகுதியின் முக்கிய வாழ்வாதாரங்களாக இருக்கின்றன.
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அன்புமணி பாமகவை சேர்ந்த டாக்டர் தமிழரசி ஆதிமூலம், தவெகவை சேர்ந்த விஜய், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஆனந்தி ஆகியோர் களத்தில் உள்ளனர்.
திமுக கூட்டணியின் பலத்துடன் பிரேமலதா களமிறங்குகிறார். ஏற்கெனவே விஜயகாந்த் ஜெயித்த தொகுதி. தேமுதிகவின் கோட்டை என அழைக்கப்பட்ட ஒரு தொகுதி. கடந்த 10 ஆண்டுகளாக ஒரு சட்டசபை உறுப்பினரை கூட பெறாத தேமுதிகவுக்கு இந்த தேர்தல் முக்கியமானது. அதிலும் தேமுதிகவின் வாக்கு வங்கியை நம்பி திமுக 10 சீட்களையும் ஒரு ராஜ்யசபா சீட்டையும் வழங்கியுள்ளது. என்ன நடக்குமோ?
அது போல் அதிமுக கூட்டணியின் பலத்துடன் பாமக போட்டியிடுகிறது. கடந்த காலங்களில் பாமக ஒரே ஒரு முறை 2001-இல் வென்றுள்ளது. தற்போது பாமக இரண்டாக பிரிந்த நிலையில் வெற்றி வாய்ப்பு சாத்தியமா என்பதை பார்க்க வேண்டும்.
அது போல் தவெக முதல் முறையாக இந்த தேர்தலில் களம் காண்கிறது. விஜய் என்ற முகத்தை வைத்து தேர்தலை சந்திக்கிறது. நாம் தமிழர் கட்சி, தொடர்ந்து தனித்து போட்டியிட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகிவிட்டது. தொடர்ந்து தோல்வி அடைந்தாலும் துவளாமல் போட்டியிடுகிறது. இவர்களில் யார் வெல்ல போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications