தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நாளை நல்லடக்கம்.. எல்.கே.சுதீஷ் அறிவிப்பு
சென்னை: சென்னையில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என அவருடைய மைத்துநர் எல்.கே. சுதீஷ் அறிவித்துள்ளார்.
இது குறித்து விஜயகாந்தின் மைத்துநர் எல்.கே.சுதீஷ் கூறியிருப்பதாவது: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை 6.10 மணிக்கு விஜயகாந்த் காலமானார். அவருடைய உடல் தேமுதிக அலுவலகத்தில் நாளை மாலை 4.45 மணிக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது என சுதீஷ் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார். இதையடுத்து அவருடைய உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சாலிகிராமம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
அப்போது அவருடைய உடல் அருகே பிரேமலதா விஜயகாந்த் அமர்ந்திருந்தார். இந்த நிலையில் சாலிகிராமத்தில் சில நிமிடங்கள் வைக்கப்பட்டிருந்த அவருடைய உடல் தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல் வைக்கப்படுகிறது. இங்கு பொதுமக்கள், கட்சியினர் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.
வழிநெடுகிலும் தொண்டர்களும் பொதுமக்களும் கூடி நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஆம்புலன்ஸ் வாகனத்தை தட்டி தட்டி எழுப்புகிறார்கள். கட்சி அலுவலகத்திற்கு வந்தாலே விஜயகாந்த் நடித்த பாடல்கள் ஒளிபரப்படும் நிலையில் இன்று அவருடைய பூத உடல் கட்சி அலுவலகத்திற்கு வருகிறது.
விஜயகாந்தின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி ஆறுதல் தெரிவித்தார். அவருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் உடன் வந்திருந்தார். விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications