ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது.. திமுக உடன் தேமுதிக கூட்டணி வைத்ததற்கு பாஜக ரியாக்ஷன்
சென்னை: 2026-ல் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறது. பாஜக, அதிமுக கூட்டணிக்கு இது பெரிய ட்விஸ்ட்டாக பார்க்கப்படுகிறது. இதற்கு ரியாக்சன் பாஜக தரப்பில் இருந்து வந்துள்ளது. பாஜக வெளியிட்ட பதிவில், "தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்கள். அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது!" என்று கூறியுள்ளது.
2026-ல் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்தது. ஏனெனில் இந்த முறை திமுக காங்கிரஸ் கூட்டணி ஒரு அணியாகவும், அதிமுக பாஜக கூட்டணி ஒரு அணியாகவும், விஜய்யின் தவெக தனியாகவும், நாம் தமிழர் கட்சி ஒரு அணியாகவும் மோதுகின்றன. இதில் விஜய் முதல் முறையாக களம் இறங்குகிறார்.

விஜய் பிரிக்க போகும் ஓட்டு
இவர் பிரிக்க போகும் ஓட்டு யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.. எனவே 2006 மாதிரி நடக்கக்கூடாது என்பதில் அதிமுக, திமுக இரண்டுமே கவனமாக உள்ளன. அதனால் கூட்டணியில் கட்சிகளை இணைப்பதில் அதிமுக, திமுக இரண்டுமே தீவிரமாக இருந்தன. இதில் பல்வேறு கட்சிகள் கூட்டணிகளில் இணைந்துவிட்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக யாரும் எதிர்பாராத நகர்வாக திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறது.
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்து ஏன்
தேமுதிகவை பொறுத்தவரை ஒரு ராஜ்யசபா சீட் தங்களுக்கு தர வேண்டும் என்று நிபந்தனையுடன் தான் பேச்சுவார்த்தை நடத்திவந்ததாக தகவல்கள் பரவி வந்தன. திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், அதிமுக கூட்டணியில் இணையவே அதிக வாய்ப்பு உள்ளதாகவே தகவல்கள் பரவி வந்தன. ஏனெனில் திமுக உடன் தேமுதிக ஒரு முறை கூட்டணி வைத்தது இல்லை. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக இந்த முறை தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அனேகமாக 7 தொகுதி ஒதுக்கப்படலாம் என்றும் ஒரு ராஜ்யசபா சீட் தரப்படலாம் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.
கேப்டன் ஆன்மா மன்னிக்காது
தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்ததை அதிமுக, பாஜக அதிர்ச்சியுடன் தான் பார்க்கின்றன. இந்நிலையில் பாஜக தனது எதிர்வினையை ட்விட்டரில் ஆற்றி உள்ளது. தமிழ்நாடு பாஜக பக்கத்தில், "தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்கள். அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது!" என்று கூறியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
இதனிடையே தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்ததை வரவேற்று முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், "தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான 'கேப்டன்' விஜயகாந்த் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications