மாமா! அப்பாவை பாருங்க! சுதீஷை கட்டி பிடித்து அழுத விஜய பிரபாகரன்.. விம்மி வெடித்த சண்முகபாண்டியன்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு வரப்படும் நிலையில் விஜயகாந்தின் மகன்கள் விஜய பிரபாகரனும் சண்முக பாண்டியனும் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்கள்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த நவம்பர் மாதம் 18ஆம் தேதி காய்ச்சல், சளி காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பூரண நலம் பெற்றார் என அறிவித்த மியாட் மருத்துவமனை அவரை வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்தது.

இதையடுத்து கடந்த 14 ஆம் தேதி திருவேற்காட்டில் நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டார். இந்த நிலையில் அவர் வீல் சேரில் வந்ததை பார்த்ததுமே ரசிகர்கள் மனம் நொறுங்கிவிட்டது.
வாட்டசாட்டமாக கம்பீரமாக காட்சியளித்த விஜயகாந்த் தேகம் பாதியான நிலையில் சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்தது காண்போர் நெஞ்சை கலங்க செய்தது. இந்த நிலையில் அவர் நேற்று முன் தினம் மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என கட்சி சார்பில் அறிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு மூச்சு விடுதலில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து அவரது சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து விஜயகாந்த் உடல்நிலையில் சற்று பின்னடைவு என தகவல் கிடைத்தது. இதையடுத்து கட்சியினர் ரசிகர்கள் என விஜயகாந்த் வீடு முன்பும் கட்சி அலுவலகம் முன்பும் கூடினர்.
இந்த நிலையில் விஜயகாந்த் நுரையீரல் அழற்சியால் காலமானார் என மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விஜயகாந்தின் உடல் சாலிகிராமம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் அவருடைய உடலை ஆம்புலன்ஸில் வைத்துக் கொண்டு வரும் போது தொண்டர்கள், ரசிகர்கள் , பொதுமக்கள் என ஊர்வலமாக வந்தனர். இந்த நிலையில் ஆம்புலன்ஸில் பிரேமலதா, சுதீஷின் மனைவி ஆகியோர் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஊர்வலத்தில் மகன்கள் விஜய பிரபாகரனும் சண்முக பாண்டியனும் நடந்தே வந்தனர்.
ஒரு இடத்தில் மட்டும் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து விஜயபிரபாகரனை ஆட்டோவில் ஏறுமாறு நிர்வாகிகள் கூறியதை அடுத்து அவர் ஆட்டோவில் முன்பக்க இருக்கையில் அமர்ந்தார். அப்போது கண்ணீர் விட்டபடியே வந்துக் கொண்டிருந்தார். இதையடுத்து விஜயகாந்தின் உடல் கட்சி அலுவலகத்தை அடைந்தது.
அப்போது அங்கிருந்த மாமா சுதீஷை கட்டி அணைத்தபடி விஜயபிரபாகரன் கதறினார். அவருக்கு சுதீஷ் ஆறுதல் தெரிவித்தார். அது போல் கட்சி நிர்வாகியும் விஜய பிரபாகரனை கட்டி அணைத்து அழுதார். தந்தை இறந்துவிட்ட துக்கத்தில் சண்முக பாண்டியனும் கண்ணீர் விட்டு கதறி வருகிறார்.












Click it and Unblock the Notifications