சிறுபான்மை மக்களின் வாக்குகள்.. விஜயை அனுப்பியதே பாஜகதான்.. திமுக வழக்கறிஞர் சரவணன் ஒரே போடு!
சென்னை: தமிழ்நாட்டில் அரசியல் செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக தவெக தலைவர் விஜய் பாஜகவை எதிர்த்து வருவதாக திமுக வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார். பாஜகவின் செயல்பாடுகளுக்கு விஜய் பெரிதாக எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை என்று கூறிய அவர், சிறுபான்மை மக்கள் வாக்குகளை கவர்வதற்காக விஜயை பாஜக அனுப்பி வைத்துள்ளதோ என்ற சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தவெகவின் முதல்வர் வேட்பாளர் விஜய், கூட்டணி குறித்து முடிவு எடுக்க விஜய்-க்கு முழு அதிகாரம் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதன்பின் தவெக தலைவர் விஜய் பேசுகையில், கொள்கை எதிரிகள், பிளவுவாத சக்திகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி கிடையாது.

பாஜகவுடன் கூட்டணி இல்லை
அரசியல் ஆதாயத்திற்காக மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தி வேற்றுமையை ஏற்படுத்துகிறது பாஜக. அவர்களின் விஷமத்தனமான வேலைகள் தமிழ்நாட்டில் எடுபடாது. பெரியார், அண்ணாவை அவமதித்து அரசியல் செய்தால், பாஜக ஒருபோதும் வெற்றியை பெற இயலாது. சுயநல அரசியல் ஆதாயத்திற்காக பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுகவோ, அதிமுகவோ அல்ல தவெக. பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை.
திமுக, பாஜக எதிர்ப்பு
அதில் தவெக உறுதியாக இருக்கிறது. தவெக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி திமுக மற்றும் பாஜகவுக்கு எதிராகவே இருக்கும். அதில் எந்த சமரசமும் கிடையாது என்பதை உறுதியாக தெரிவித்து கொள்கிறோம் என்றும் கூறினார். முதல் மாநாடு முதலே திமுகவை கடுமையாக எதிர்த்து வரும் விஜய், பாஜகவையும் அவ்வப்போது விமர்சித்து வருகிறார்.
திமுக வழக்கறிஞர் சரவணன் கருத்து
இந்த நிலையில் விஜய் பேச்சு குறித்து திமுக வழக்கறிஞர் சரவணன் பேசுகையில், பாஜக மற்றும் திமுக உடன் கூட்டணி இல்லை என்று விஜய் சொல்லி இருக்கிறார். ஆனால் விஜய் உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று திமுக ஏங்கவில்லை. அவருடைய கூட்டணிக்கு ஏங்கியவர்கள் பாஜக தான். பாஜக தலைவர்கள் மட்டுமே தவெக தங்களுடன் வர வேண்டும் என்று ஆசையை வெளிப்படுத்தி கொண்டிருந்தார்கள். அதனால் அவர்கள் தான் ஏமாற்றம் அடைவார்கள்.
தமிழக அரசியல்
கொள்கை எதிரி, அரசியல் எதிரி, ஃபாசிசம், பாயசம் என்றெல்லாம் விஜய் வகைப்படுத்தி வைத்திருக்கிறார். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவை எதிர்க்கக் கூடிய ஒரே இயக்கமாக முதல்வர் ஸ்டாலின் மட்டுமே இருக்கிறார். பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது திமுக மட்டும்தான். தமிழ்நாட்டில் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக பாஜக தங்களின் கொள்கை எதிரி என்று தவெக கூறுகிறது.
சிறுபான்மை வாக்குகள் குறி
ஆனால் பாஜகவின் செயல்பாடுகளுக்கு திமுக தெரிவிக்கும் எதிர்ப்பை போல் தவெக தலைவர் எதிர்ப்பதில்லை. அந்த அடிப்படையிலான தான் விஜயின் அறிவிப்பை பார்க்க வேண்டும். சிறுபான்மையின வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காக பாஜகவால் விஜய் அனுப்பி வைக்கப்பட்டுள்ளாரோ என்ற சந்தேகம் மீண்டும் உறுதியாகிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications