விஜய் கட்சி 6 மாசத்துக்கு மேல தாங்காது.. படமே 2 நாள் தாண்டல.. திமுக அமைச்சர் தாக்கு!
சென்னை: விஜய் நடித்த படமே 2 நாட்களுக்கு மேல் ஓடவில்லை. விஜய்யின் அரசியல் கட்சி 6 மாதம் தான், அதற்கு மேல் தாங்காது என திமுக அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடத்துவதற்கு திமுக அரசு குடைச்சல் கொடுப்பதாக விமர்சிக்கப்படும் நிலையில், அமைச்சரின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த மாடம்பாக்கத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், “இன்று நடிகர்கள் எல்லாம் அரசியல் பக்கம் வந்துவிட்டனர். ஏற்கனவே அரசியலுக்கு வந்த நடிகர் நிலைமை எல்லாம் என்னவென்று நாம் பார்த்துவிட்டோம். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து இன்று என்ன ஆனா? அதேபோல் தற்போது ஒருவர் அரசியலுக்கு வந்துள்ளார்.

விஜய் கட்சி 6 மாதம் கூட தாங்காது: யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவினர் பயப்படக்கூடாது. என்றும் நிலைத்திருக்கும் ஒரே கட்சி திமுகதான். விஜய் நடித்த படமே 2 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடவில்லை. அதனால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 6 மாதங்கள்தான் தாக்குப் பிடிக்கும். அதற்கு மேல் தாங்காது.
சினிமாவுக்கு வருகிற கூட்டத்தை பார்த்து நடிகர் விஜய் கட்சி தொடங்கி இருக்கிறார். 6 மாதத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகம் என்ற சினிமா பெட்டியை உள்ளே வைத்துவிடலாம்” எனப் பேசியுள்ளார் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்.
தமிழக வெற்றிக் கழகம்: தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நடிகர் விஜய், 2026ல் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளார். தற்போது கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார் விஜய். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்காக தவெக கட்சியினர் இடம் தேர்வு செய்துள்ளனர்.
விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் அதற்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்று கூறி விழுப்புரம் மாவட்ட எஸ்.பி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் தவெக சார்பில் மனு கொடுக்கப்பட்டது. காவல் துறையினர், மாநாடு பற்றி 21 கேள்விகள் கேட்டு தவெகவுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
விஜய் மாநாடு: பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 21 கேள்விகளுக்கான பதில் விளக்கத்தினை கடந்த 6 ஆம் தேதி போலீசாரிடம் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு போலீசார் நேற்று நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் மாநாடு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநாடு நடைபெறும் தேதியை விஜய் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாநாட்டில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகத்திற்கு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிக்கான அங்கீகாரத்தை அளித்துள்ளது தேர்தல் ஆணையம்.
விஜய் vs திமுக?: வருகிற 23 ஆம் தேதி மாநாட்டை நடத்த விஜய் திட்டமிட்டு உள்ளார். விஜய் அரசியலுக்கு வருவதால் திமுகவுக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுகவுக்கு எதிரான வலுவான அணியில் விஜய் இணைந்தால் திமுகவுக்கு சிக்கலாகும் எனக் கருதப்படுகிறது. இந்தச் சூழலில் தான் விஜய் கட்சியை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.












Click it and Unblock the Notifications