ஒரே பெயரில் பலர் போட்டி! சென்னையில் விஜய் உள்பட தவெக –அதிமுக வேட்பாளர்களுக்கு சிக்கல்! லிஸ்ட் இதோ
சென்னை: சென்னையில் விஜய் போட்டியிடும் பெரம்பூர் உள்பட பல தொகுதிகளில் தவெக வேட்பாளர்களின் பெயர்களை கொண்டவர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இவர்கள் போட்டியிடும்போது அது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். இந்த பட்டியலில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளும் அடங்கும். எந்தெந்த தொகுதிகளில் என்ன நிலவரம் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முடிவடைந்தது. வேட்புமனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி நாளாகும். அதன்பிறகு தான் இறுதி வேட்பாளர் பட்டியல் தொகுதி வாரியாக வெளியிடப்படும்.

இந்நிலையில் தான் தற்போது வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதன் அடிப்படையில் சென்னையில் தவெக வேட்பாளர்களின் பெயர்களை போல் பெயர் வைத்திருப்போர் ஒவ்வொரு தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
அந்த வகையில் தவெக வேட்பாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகள் மாறலாம். இந்நிலையில் தான் சென்னையில் எந்தெந்த தொகுதிகளில் தவெக வேட்பாளர்களின் பெயர்களை கொண்டவர்களில் எத்தனை பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது என்பது பற்றி இங்கு பார்க்கலாம். இந்த
உதயநிதியின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து விஜயின் தவெக சார்பில் டி செல்வம் என்பவர் களமிறங்கி உள்ளார். இங்கு தவெக வேட்பாளர் பெயரை போல் கொண்ட கே செல்வம், செல்வம், செல்வம் என 3 பேர் சுயேச்சையாக களமிறங்கி உள்ளனர். இதுதவிர கே செல்வா என்ற பெயரிலான ஒரு வேட்புமனுவும் ஏற்கப்பட்டுள்ளது.
சேகர்பாபுவின் துறைமுகம் தொகுதி
துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு போட்டியிட்டுள்ளார். இவரை எதிர்த்து தவெக சார்பில் சினோரா பிஎஸ் அசோக் என்பவர் களமிறங்கி உள்ளார். இந்த தொகுதியில் சுயேச்சையாக சினோரா எஸ் அசோக், சினோரா அசோக் குமார் என்ற பெயரில் 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இது தவெக வேட்பாளருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
விஜயின் பெரம்பூர் தொகுதி
பெரம்பூர் தொகுதியில் தவெக சார்பில் கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் போட்டியிடுகிறார். இவர் சி. ஜோசப் விஜய் என்ற பெயரில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இங்கு கே.விஜய், ஜி.விஜய் என்ற பெயர்களில் 2 பேரும், அதேபோல் எம்.ஜோசப், எஸ்.ஜோசப் என்ற 2 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
எழும்பூர் - ஆயிரம் விளக்கு தொகுதி
தவெகவின் துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் ஆர் ராஜ்மோகன் என்ற பெயரில் ஒருவரின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தவெக சார்பில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் போட்டியிடுகிறார். இங்கு டி பிரபாகரன், வி பிரபாகரன், பி பிரபாகரன் என்ற பெயரில் 3 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. அதேபோல், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பி. வளர்மதி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து வளர்மதி, இ வளர்மதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
ராயபுரம் - வில்லிவாக்கம்
ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் களமிறங்கி உள்ளார். இவருக்கு எதிராக அதே பெயரில் டி ஜெயக்குமார் என்ற பெயரில் 2 பேரும், ஏ ஜெயக்குமார் என்ற பெயரில் ஒருவரும் சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.இதுதவிர எம் ஜெய்ராஜ்குமார், என்பவரின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டுள்ளது.
வில்லிவாக்கம் சட்டசபை தொகுதியில் தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா, திமுக சார்பில் கார்த்திக் மோகன் போட்டியிடுகின்றனர். இங்கு அதிமுக வேட்பாளராக எஸ்ஆர் விஜயகுமார் களமிறங்கி இருக்கிறார். அவருக்கு போட்டியாக ஜி விஜயகுமார், டி விஜயகுமார் ஆகியோர் களமிறங்கி உள்ளனர். திமுக வேட்பாளராக கார்த்திக் மோகன் களமிறங்கி உள்ள நிலையில் கார்த்திக் எஸ், கார்த்திக் பி என்பவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications